தேமுதிக தலைவர் விஜயகாந்த் அத்திவரதரை தரிசித்து சென்றதன் பின்னணியில் பிரேமலதாவின் அரசியல் கணக்கு இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

யாரும் எதிர்பாராத வகையில் நேற்று காலை திடீரென விஜயகாந்த் தனது மனைவி மற்றும் இளைய மகனுடன் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றார். இதில் குறிப்பிடவேண்டிய அம்சம் என்ன என்றால் கோவில் வளாகத்தில் காரில் இருந்து இறங்கிய அவர் நடந்தே சென்று அத்திவரதரை தரிசித்தார். அவரை அவரது உதவியாளர் கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டிருந்தார். 

ஆனால் சமீப காலங்களை ஒப்பிடுகையில் விஜயகாந்தின் உடல் நிலை சற்று தெம்பாகியுள்ளது தெரியவருகிறது. மேலும் விஜயகாந்த் தெய்வ பக்தி அதிகம் உள்ளவர். எனவே சாமி தரிசனம் என்றால் இயல்பாகவே அவரது ஸ்டெமினா கூடியிருக்கும். இருந்தாலும் கூட கட்சி அலுவலகத்திற்குள் செல்வதற்கு விஜயகாந்த் தட்டுத்தடுமாறுவார். அப்படி இருக்க விஜயகாந்தை இவ்வளவு தூரம் நடக்க வைத்து அழைத்துச் செல்ல வேண்டுமா என்கிற கேள்வி எழுந்தது. 

கலைஞரை போல் வீல் சேரில் அமர வைத்து விஜயகாந்தை அழைத்துச் சென்று இருக்கலாம். விமான நிலையங்களில் எல்லாம் விஜயகாந்த் அப்படித்தான் அழைத்துச் செல்லப்படுகிறது. ஆனால் கோவிலில் மட்டும் அப்படி ஒரு ஏற்பாடு செய்யப்படாததற்கு விஜயகாந்தின் பிடிவாதம் தான் காரணம் என்கிறார்கள் அவரது பிடிவாதம் காரணமாகவே நடந்துசென்றதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த விஷயத்தில் பிரேமலதா உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து கணக்கு போட்டுள்ளதாக சொல்கிறார்கள். மேலும் உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் விஜயகாந்த் குணமாகிவிட்டார் என்பதை காட்ட இப்படி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பேசுகிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் விஜயகாந்தின் மகன் நடிக்கும் மித்ரன் படத்திற்கு பைனான்ஸ் தேவைப்படுகிறது. 

இதற்கு விஜயகாந்தின் உடல் நிலை நன்றாக இருப்பது போல் காட்டினால் எளிதாக இருக்கும் என்றும் ஒரு கணக்கு போட்டுள்ளார். இதனால் தான் விஜயகாந்தை அத்திவரதரை தரிசிக்க நடந்தே அழைத்துச் சென்றுள்ளார் என்று கிசுகிசுக்கிறார்கள். விஜயகாந்தே வாய் திறந்து இந்த விஷயங்களில் தெளிவுபடுத்தாத வகையில் பிரேமலதாவை மையமாக வைத்துஇது போன்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்து கொண்டே தான் இருக்கும்.