சேலம் மாவட்டம், உடையாப்பட்டி, கக்கன் காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சதீஸ். 22 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். 

கடந்த சில வாரங்களுக்கு முன் சேலம் திரும்பியவர் அங்கு பெயிண்டிங் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த   திலீப், மதுபானங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்துவந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு திலீப் வீட்டிற்குச் சென்று சதீஸ் மதுபானங்களை கேட்டுள்ளார். விற்பனை செய்வதில்லை என திலீப் கூறியும் தனக்கு உடனடியாக மதுபானம் வேண்டும் என சதீஸ் அடம்பிடித்துள்ளார். ஆத்திரமடைந்த திலீப் ஆபாச வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து விரட்டி இருக்கிறார்.

வீடு திரும்பிய சதீஷ் வீட்டிற்கு சிறிது நேரத்தில் திலீப் தனது கூட்டாளிகள் 5 பேருடன் அப்போது, ‘’என் வீட்டில் வைத்திருந்த 2000 ரூபாயை எடுத்து வந்துவிட்டாயா?’ எனக்கேட்டு தகராறு செய்துள்ளனர். அதை சதீஸின் பெற்றோர் தடுத்துள்ளனர். ஆனால் திலீப் தரப்பினர் ஆத்திரத்தில் சதீஸையும், அவருடைய பெற்றோரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

படுகாயம் அடைந்த சதீஸை மீட்ட அப்பகுதியினர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் முன்பே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திலீப் மற்றும் கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.

 

இதற்கிடையே, கொலையுண்ட சதீஸின் உறவினர்கள் இது குறித்து கூறுகையில், ’திலீப்பின் மனைவியிடம் பணம் கொடுக்காமல் சதீஸ் மதுபானம் வாங்கி வந்ததாக கூறியுள்ளார். இதைக்கேட்க வந்த திலீப்பும், கூட்டாளிகளும் 30 ரூபாய் கூடுதலாக கொடுக்காமல் ஓசியில் மதுபானம் வாங்கி வந்தாயா? எனக்கேட்டு தாக்கினர். இதில் சதீஸ் இறந்து விட்டார். உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் கூறிவருகின்றனர்.