பொதுவாக நடிகர் ரஜினி மிகப்பெரிய விஷயங்களில் ஈடுபடுவதற்கு முன்னதாக ஜோதிடர்களிடம் கலந்து ஆலோசிப்பது வழக்கம். வீட்டின் சுப நிகழ்ச்சிகளுக்கு ஜோதிடர்களை வரவழைத்து நல்ல நாள் – நேரம் குறித்து அவர்கள் சொல்வது படி நடந்து கொள்வது என்பதில் ரஜினி உறுதியாக இருப்பார். திரைப்படங்களின் பூஜை உள்ளிட்ட முக்கிய விஷயங்களுக்கு கூட ரஜினி ஜோதிடர்களை சந்திப்பார்.

திரைப்படங்கள் தொடர்பாக பேச வேண்டும் என்றால் ராகவேந்திரா மண்டபத்திற்கு தான் ஜோதிடர்களை ரஜினி வரவழைப்பார். வீட்டிற்கு வரவழைத்து பேசுகிறார் என்றால் குடும்பம் தொடர்பான சுப நிகழ்ச்சிகளுக்கு ஜோதிடர்களை ரஜினி வரவழைத்துள்ளார் என்று பொருள். இந்த நிலையில்தான் ரஜினி தனது போயஸ் கார்டன் வீட்டிற்கு ஜோதிடர் ஒருவரை வரவழைத்து பேசியுள்ளார்.

கட்சி ஆரம்பிப்பதற்கான வேலையில் 90விழுக்காடு முடிந்துவிட்டது என்று ரஜினி கடந்த மாதம் பேசியிருந்தார். 2.0 டிரைலர் வெளியீட்டு விழாவில் கூட வருவது கொஞ்சம் முன்னுக்கு பின் லேட்டாக இருக்கலாம் ஆனால் வெற்றியை உறுதி செய்து கொண்டு வர வேண்டு என்று ரஜினி கூறியிருந்தார். மேலும் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயனன் கூட, ரஜினி அரசியல் கட்சி குறித்து டிசம்பர் அல்லது ஜனவரியில் தகவல் தெவிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினி வீட்டுக்கு ஜோதிடர் வந்து சென்றது புதிய கட்சி துவங்குவதற்கான நாள் குறிக்கத்தான் என்று அவரது ரசிகர்கள் அடித்துக் கூறுகிறார்கள். மேலும் ஜோதிடர் கொடுத்த மூன்று தேதியில் எந்த தேதி மாநாட்டுக்கு சரியாக இருக்கும் என்று தனக்கு மிகவும் நெருக்கமான அரசியல் நண்பர்களுடன் ரஜினி ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.