ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக பொறுப்பாளர்கள் இருந்தாலும் வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்கிற நீண்ட திட்டத்துடன் அசைன்மென்ட் ஒன்று அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் பாஸ் செய்யப்பட்டுள்ளது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் அதிகாரம் பொருந்தியவர்கள் யார் என்றால் மாவட்டச் செயலாளர்கள் தான். மாநில பதவியே வந்தாலும் கூட மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்க யாரும் தயாராக இருக்கமாட்டார்கள். ஏனென்றால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் நியமனம், தேர்தல் நிதி வசூல் என பணம் புரளும் அனைத்து விஷயங்களும் மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தான் நடைபெறும்.

ஆனால் தேர்தல் சமயங்களில் கடந்த சில ஆண்டுகளாக தொகுதிப் பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் மூலமாக தேர்தல் வியூகத்தை செயல்படுத்தி வந்தன திமுக மற்றும் அதிமுக கட்சிகள். இதனால் தேர்தல் சமயத்தில் மாவட்டச் செயலாளர்களின் முக்கியத்துவம் குறைந்தது. இதனை மாற்றி வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் திட்டமிடலை செயல்படுத்தி வருகிறது அதிமுக. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டங்களை புதிதாக பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதியவர்கள் பலரும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியுள்ளனர். இதே போல் ஜெயலலிதா இருந்த போது அதிகாரத்தில் இருந்து பிறகு சசிகலாவால் ஓரம்கட்டப்பட்டவர்களுக்கும் கூட தற்போது மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதான் மீண்டும் மாவட்டச் செயலாளர் ஆகியுள்ளார். இதே போல் அமைச்சர் பெஞ்சமினும் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவருக்கும் தற்போது கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட் உத்தேச வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களை கவனித்துக் கொள்வது தான். அதாவது ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்கள் வசமும் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட தொகுதிகளின் வேட்பாளர் உத்தேச பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதலே அவர்களுக்கான தேர்தல் பணிகளை துவக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது தொகுதிக்கு இவ்வளவு என்று பட்ஜெட் போடப்பட்டுள்ளது. அந்த பட்ஜெட் தொகையை திரட்டுவது, செலவழிக்கும் விதம் உள்ளிட்ட விவரங்களை தலைமைக்கு அனுப்ப மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை, பூத் அடிப்படையிலான வாக்காளர்களின் பழைய ஹிஸ்டரி போன்றவற்றையும்  அவர்களின் செல்போன் எண்ணுடன் சேகரிக்கும் பணிகளையும் மாவட்டச் செயலாளர்கள் மேற்பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகளில் தொகுதிப் பொறுப்பாளர்கள் முழு வீச்சில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பாணியில் ஒவ்வொரு தொகுதியையும் ஒவ்வொரு வாக்காளராக அணுகினால் மட்டுமே வெற்றி என்பதால் இந்த திட்டமிடலுடன் மாவட்டச் செயலாளர்களை களத்தில் இறக்கியுள்ளது ஓபிஎஸ் – ஈபிஎஸ் தரப்பு.

இந்த விவகாரத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கூடவே கூடாது என்று மாவட்டச் செயலாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனத்திலும் கூட ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பு சமமாக வாய்ப்புகளை பெற்றுள்ளது. இதன் மூலம் தேர்தல் வரை கட்சிக்குள் எவ்வித சலசலப்பும் வராமல் பார்த்துக் கொள்ளலாம் என்றுஅதிமுக மேலிடம் கருதுகிறது. தேர்தல் பணிகள் துவங்கியுள்ளதால் கட்சி நிர்வாகிகளிடம் பணப்புழக்கம் தொடங்கியுள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் தற்போதே உற்சாகம் அடைந்துள்ளனர்.