அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை ஆவணங்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு சீலிட்ட கவரில் தாக்கல் செய்துள்ளது. 

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூறுகையில் அமைச்சர் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் விசாரணை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், இதையேற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1996-ல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர். அந்த மனுவில், மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்படாததால், சொத்துக்குவிப்பு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பொதுத்துறை செயலர் தரப்பில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.