தமிழக சட்டமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடந்தாலும் சந்திக்க தயாராகும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் உள்ளன. நாடு முழுவதும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி தீவிரம் காட்டி வருகிறார். தேர்தல் ஆணையம் இதற்கான வாய்ப்பு இல்லை என்று அண்மையில் கை விரித்து விட்டது. ஆனால் சட்டத்தில் திருத்தம் செய்து நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும் என்று சட்ட ஆணையம் கூறியுள்ளது. இதனால் விரைவில் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் நாடாளுமன்ற தேர்தலுடன் கணிசமான எண்ணிக்கையில் சட்டமன்றங்களுக்கும் தேர்தலை நடத்த பா.ஜ.க ஆர்வம் காட்டி வருகிறது. தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அனைத்து மாநிலங்களுடன், தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத ஒரு சில மாநிலங்களிலும் நாடாளுமன்றத்துடன் தேர்தலை நடத்திவிடலாம் என்பது தான் பா.ஜ.கவின் வியூகம். பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களை பொறுத்தவரை தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் முன்கூட்டியே தேர்தலுக்கு ஒப்புக் கொள்ளாது என்று கூறப்படுகிறது. தமிழகத்திலும் கூட 2021 வரை அ.தி.மு.க ஆட்சி தொடர வேண்டும். அதன் பிறகு வேண்டுமானாலும் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலையும் வைத்துக் கொள்ளலாம் என்று டெல்லியில் நடைபெற்ற தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. 

ஆனால், மத்திய அரசு நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்திற்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்கான காய் நகர்த்தல்களில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் அ.தி.மு.கவிற்கு நெருக்கடி கொடுக்கவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக திடீரென வருமான வரித்துறை சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவான தீர்ப்பு வந்துவிட்டார் பிரச்சனை இல்லை.  மாறாக தினகரனுக்கு ஆதரவாகதீர்ப்பு வரும் பட்சத்தில் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கான பலம் குறையும். மீண்டும் தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படும்.

 

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம், நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 2021 வரை அ.தி.மு.க அரசு நீடிக்க வேண்டும் என்கிற தங்கள் விருப்பத்தை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துவிட்டதாக எடப்பாடி பதில் அளித்தார். அதே சமயம் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க அ.தி.மு.க தயாராகவே உள்ளதாகவும் எடப்பாடி கூறினார். இதன் மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுத்து அடுத்த ஆண்டே தேர்தலுக்கு கட்டாயப்படுத்தினாலும் தயாராவதை தவிர வேறு வழியில்லை என்று எடப்பாடி பழனிசாமி கருதுவதே அவரது இந்த பேட்டி தெரிவிக்கிறது.