திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12 முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 19ம் தேதி வரை மனுக்களைத் தாக்கல் செய்யலாம். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. விருப்பமனுவை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மு.க.ஸ்டாலின் இன்று விருப்பமனு தாக்கல் செய்தார்.  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் விருப்பமனுவை மு.க.ஸ்டாலின் அளித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1984-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். 1984-ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார். பின்னர், 1989-ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஸ்டாலின், 1996-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். 2001, 2006 சட்டப்பேரவை தேர்தல்களிலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். 

 2011 மற்றும் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற மு.க.ஸ்டாலின் 3-வது முறையாக அத்தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.