கொரோனா காரணமாக 70 நாடுகள் தேர்தலை தள்ளிவைத்துள்ள நிலையில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்து வாக்குப்பதிவு செய்யவதற்கான நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 

பிகார் சட்டப்பேரவையின் காலம் வரும் நவம்பர் 29-ம் தேதியோடு முடிகிறது. ஆதலால், அதற்குத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஆனால், கரோனா வைரஸ், பிகார் மாநிலத்தில் பெய்த மழை, அதனால் உருவான வெள்ளம் போன்றவற்றால் தேர்தல் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ‘’இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான பீகார் தேர்தலுக்கு மிகப்பெரிய ஏற்பாடு செய்ய வேண்டும். பீகார் சட்டமன்றத்தின் ஆயுள் காலம் நவம்பர் 29 உடன் முடிவடைகிறது. பீகாரின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.29 கோடி.பீகார் தேர்தலுக்கு 1,89,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் அமைக்கப்படும். வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கவச உடை, முகக்கவசம், சானிடைசர் வழங்கப்படும்.  இங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

 

அதன்படி முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ல் தேர்தல் நடைபெறும். 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ல் தேர்தல் நடைபெறும்.* 3வது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ல் தேர்தல் நடைபெறும்.  பீகார் தேர்தலை நடத்த அதிக மனிதவளம், கட்டமைப்பு தேவைப்படுகிறது.

பீகார் தேர்தலில் வாக்களிக்க உள்ள 7 கோடி வாக்காளர்களுக்கும் கையுறை வழங்கப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீகார் தேர்தல் வாக்களிப்பு நேரம், ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும்.1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்பது, ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு மையம் என நிர்ணயம் செய்யப்படும் என அவர் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.