1996 மற்றும் 2006ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற நிலையில் அந்த இரண்டு சமயமும் திமுக ஆட்சியை கைப்பற்றியது தான் தற்போதைய சலனத்திற்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

1984ம் ஆண்டு முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். முதல் முறையே அவர் தோல்வி அடைந்தார். பிறகு 1989ல் அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார் ஸ்டாலின். பிறகு 1991ம் ஆண்டு தேர்தலில் மறுபடியும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனை தொடர்ந்து மறுபடியும் 1996, 2001 மற்றும் 2006 என மூன்று முறை தொடர்ந்து அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மு.க.ஸ்டாலின்.

1996ம் ஆண்டு சுமார் 70 சதவீத வாக்குகள் பெற்று ஸ்டாலின் அமோக வெற்றி பெற்றார். ஆனால் 2001ம் ஆண்டு வாக்கு சதவீதம் 50 சதவீதமாக குறைந்தாலும் ஸ்டாலின் வென்றார். 2006ம் ஆண்டு மறுபடியும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெறும் 46 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று ஸ்டாலின் வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடவில்லை. இதற்கு காரணம் அங்கு வாக்கு சதவீதம் குறைந்தது தான் என்றார்கள். பிறகு 2011 மற்றும் 2016ம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஸ்டாலின் எம்எல்ஏவாக உள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால் இரண்டு முறை ஸ்டாலின் கொளத்தூரில் வென்றாலும் திமுகவால் ஆட்சிப் பொறுப்புக்கு வரமுடியவில்லை. இதனால் சென்டிமெண்டாக கொளத்தூரை ராசி இல்லாத தொகுதி என்று சிலர் ஸ்டாலினிடம் கூறி வருகின்றனர். இதே போல் ஸ்டாலின் வீட்டிலும் கூட கொளத்தூர் இந்த முறை வேண்டாமே என்கிற குரல் எழுந்துள்ளதாக கூறுப்படுகிறது. அதே சமயம் திமுக ஆட்சிக்கு வந்த 1996 மற்றும் 2006ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஆகியுள்ளார். எனவே சென்டிமெண்டாக மறுபடியும் ஸ்டாலினை ஆயிரம் விளக்கில் போட்டியிடுமாறு அவரது குடும்பத்தினரே வலியுறுத்தி வருவதாக கூறுகிறார்கள்.

இதே போல் வேறு சிலரோ சென்னையே வேண்டாம் கருணாநிதியை போல் திருவாரூரில் போட்டியிடலாம் என்று யோசனை கூறி வருகின்றனர். ஆனால் கருணாநிதி திருவாரூரில் 2011 மற்றும் 2016ல் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். ஆனால் அவரால் முதலமைச்சராக முடியவில்லை. எனவே ஸ்டாலினை சென்டிமெண்டாக திருவாரூரும் வேண்டாம் என்று நெருக்குவதாக சொல்கிறார்கள். சென்னையை பொறுத்தவரை ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி உறுதி என்கிறார்கள்.

அதிலும் தந்தை வென்று முதலமைச்சர் ஆனா சேப்பாக்கம் திருவல்லிக்கேனி தொகுதி என்றால் சென்டிமெண்டாக முதலமைச்சர் பதவி தேடி வரும் என்பதோடு அங்கு இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளதால் எளிதில் வெற்றி பெற முடியும் என்றும் ஸ்டாலின் தரப்பு கணக்கு போடுகிறது. ஆனால் பத்து வருடங்களாக எம்எல்ஏவாக இருந்த கொளதூர் தொகுதியில் தற்போ வரை ஸ்டாலினுக்காக அடிமட்டம் வரையில் திமுகவினர் தேர்தல் பணிகளை செய்து வைத்துள்ளனர். அப்படி இருக்கையில் திடீரென தொகுதி மாறினால் அதே போன்ற ஒரு கட்டமைப்பை அந்த தொகுதியில் குறுகிய காலத்தில் ஏற்படுத்த முடியுமா? என்றும் கட்சிக்காரர்கள் யோசிக்கிறார்கள்.

ஆனால் கலைஞர் ஜெயித்து முதலமைச்சராக உதவிய ஏதாவது ஒரு தொகுதியை ஸ்டாலின் தேர்வு செய்யவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். அந்த வகையில் இந்த முறை கொளத்தூரில்ஸ்டாலின் களம்இறங்குவது சந்தேகம் என்றே சொல்லலாம்.