திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையும் சொல்லிக் கொள்ளும்படி சாதகமாக இல்லாத காரணத்தினால் தனித்து போட்டியிடுவது குறித்து பாமக யோசிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலு தனித்து போட்டியிட்டு திமுக, அதிமுகவிற்கு பிறகு தமிழகத்தில் வாக்கு வங்கி உள்ள கட்சி பாமக தான் என்பதை அந்த கட்சி நிரூபித்தது. குறிப்பாக வட மாவட்டங்களில் பாமக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். விஜயகாந்த் தலைமையில் அமைந்த மக்கள் நலக்கூட்டணியால் வட மாவட்டங்களில் பல்வேறு தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பாமக வேட்பாளர்களை கூட முந்த முடியவில்லை. அந்த அளவிற்கு பாமக தனித்து போட்டியிட்டு வாக்குகளை அறுவடை செய்தது. இதன் காரணமாகவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு அதிமுக தொகுதிகளை வாரி வழங்கியது.

ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியை தொடர பாமக நிறுவனர் ராமதாஸ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் திமுக தரப்பில் இருந்தும் பாமகவிற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. வந்தால் வாருங்கள் கவுரவமான தொகுதிகளை தருகிறோம் என்கிற ரீதியில் தான் பாமகவிற்கு திமுக தரப்பில் இருந்து பதில் அளிக்கப்படுகிறது. இதனால் திமுகவுடன் பேரம் பேச முடியாத நிலையில் பாமக உள்ளது. எனவே கடந்த முறையை போலவே இந்த முறையும் தனித்து போட்டியிட்டால் என்ன என்பது பற்றி ராமதாஸ் யோசிக்க ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு என்கிற முழக்கத்தை முன் வைத்து தேர்தலை தனித்து சந்திக்க ராமதாஸ் முடிவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். ஆனால் கடந்த முறையை போல் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தாமல் பாமக கடந்த முறை கணிசமான வாக்குகளை பெற்ற தொகுதிகளில் மட்டும் மறுபடியும் வேட்பாளர்களை நிறுத்தி அங்கு மட்டும் கவனம் செலுத்த ராமதாஸ் காய் நகர்த்துவதாக சொல்லப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மீதும் மக்களுக்கு பெரிய அளவில் அபிப்ராயம் இல்லை. இரண்டு கட்சிகளிலுமே மக்களை கவர்ந்த தலைவர்கள் இல்லை. எனவே இந்த தேர்தல் வித்தியாசமானதாக இருக்கும் என்பதால் தனித்து களம் இறங்குவதை பற்றி ராமதாஸ் சற்று அதிகமாகவே யோசிக்க ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.

இதற்கு முந்தைய தேர்தல்களை போல் இந்த தேர்தலை ராமதாஸ் எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். தமிழகம், புதுச்சேரியில் ஆட்சியில் பங்கெடுக்க வேண்டும் என்பது தான் கடந்த 20 வருடங்களாக ராமதாசின் இலக்காக உள்ளது. அதற்கு தற்போது உகந்த சூழல் நிலவுவதாக அவர் நம்புகிறார். கலைஞர், ஜெயலலிதா இருந்த வரை அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் அதனை பாமக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்எ ன்பதில் ராமதாஸ் தீர்க்கமாக உள்ளதாக சொல்கிறார்கள். எனவே தான் அதிமுகவுடனான பேச்சுவார்த்தையின் போது ஆட்சியில் பங்கு என்கிற நிபந்தனையை ராமதாஸ் முன்வைத்ததாக கூறுகிறார்கள்.

ஆனால் இந்த நிபந்தனையை முதல் சுற்றிலேயே அதிமுக நிராகரித்தது தான் பாமகவின் கோபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எத்தனை தொகுதிகள், ஒரு தொகுதிக்கு செலவுக்கு எவ்வளவு தேவை என்பது தான் பாமகவிடம் அதிமுக கேட்கும் விவரம் என்றும் ஆட்சியில் பங்கு, துணை முதலமைச்சர் பதவி போன்றவை குறித்தெல்லாம் பேச அதிமுக தயாராக இல்லை. இதே நிலை தான் திமுக முகாமிலும் உள்ளது. எனவே வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வேண்டும் என்றால் தனித்து போட்டியிடும் பாமகவை ஆதரியுங்கள் என்று வட மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து கணிசமான தொகுதிகளில் வென்றால் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கலாம் என்பது தான் தற்போதைய ராமதாசின் வியூகம் என்கிறார்கள்.