அதிமுகவை எளிதாக வீழ்த்த முடியாது என்கிற முடிவுக்கு வந்துள்ள திமுக பலமான கூட்டணி அமைக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது.

தமிழக மக்கள் அதிமுக அரசு மீது அதிருப்தியில் இல்லை என்கிற கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக தரப்பை யோசிக்க வைத்துள்ளதாக கூறுகிறார்கள். தேர்தல் நெருங்கும் சூழலில் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீம் தமிழகம் முழுவதும் மறுபடியும் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து முடித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு மக்களின் மனநிலையை அறிய மட்டுமே என்கிறார்கள். பெரிய அளவில் அதிமுக அரசு மீது அதிருப்தி இல்லை என்பதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இமேஜ் உயர்ந்து வருவதையும் இந்த கருத்துக்கணிப்பு திமுக தரப்பிற்கு எடுத்துக்கூறியுள்ளது.

எனவே தேர்தலில் அதிமுகவை வீழ்த்த வியூகத்தை மாற்ற திமுக தயாராகி வருகிறது. இதனால் தான் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி வியூகத்தில் தான் மாற்றத்தை முதலில் செய்ய வேண்டும் என்று திமுக முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அதன்படி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தங்களுக்கு பலன் அளிக்காது என்கிற முடிவுக்கும் திமுக வந்துவிட்டதாக சொல்கிறார்கள். எனவே தற்போது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளுக்கு பதிலாக பாமக, கமலின் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை உள்ளே கொண்டு வர திமுக முயற்சியை தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருப்பதும், அண்மையில் தமிழகம் வந்து சென்ற ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலினை சந்திக்காததும் திமுக தலைமையை அதிருப்தி அடைய வைத்துள்ளது. மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் போன்றோரின் பேச்சும் திமுக தலைமையை டென்சன் ஆக்கியுள்ளது. அத்தோடு காங்கிரசுக்கு கொடுக்கும் ஒவ்வொரு தொகுதியும் அதிமுகவிற்கு தாரைவார்க்கப்படுவதற்கு சமம் என்பதால் அந்த கட்சி கூட்டணிக்கு அவசியம் இல்லை என்கிற முடிவிற்கு தீர்க்கமாவே திமுக வந்துவிட்டதாக கூறுகிறார்கள். கன்னியாகுமரியை தவிர காங்கிரஸ் வேறு எங்கும் பெரிய அளவில் உபயோகமாக இருக்காது என்பதை திமுக தலைமைக்கு சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே தான் புதுச்சேரியில் இருந்து திமுக பிரச்சனையை ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள். புதுச்சேரியை பொறுத்தவரை கடந்த 1996ம் ஆண்டு 7 தொகுதிகளை திமுக வென்றது. அதன் பிறகு அங்கு 7 தொகுதிகளை திமுக வென்றது. இது தான் புதுச்சேரியில் திமுகவின் சிறந்த பெர்பார்மன்ஸ் எனலாம். மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளை வென்றால் தான் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 2ல் மட்டுமே திமுக வென்றது. இந்த அளவிற்கு புதுச்சேரியில் திமுக பலவீனமாக உள்ளது.

ஆனால் திடீரென புதுச்சேரியில் திமுக ஆட்சி என்கிற முழக்கத்துடன் ஜெகத்ரட்சகனை திமுக களம் இறக்கியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரசுடன் பிரச்சனையை ஆரம்பித்து கூட்டணியை முறிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார்கள். புதுச்சேரியில் ஆரம்பிக்கும் பிரச்சனையை தமிழகம் வரை கொண்டு வந்து இங்கும் காங்கிரசை கழட்டிவிட்டுவிட்டு பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளை கூட்டணியில் சேர்க்க திமுக தரப்பு ஜரூராக களம் இறங்கிவிட்டதாக பேச்சுகள் அடிபடுகின்றன.