சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார வியூகத்தை தயார் செய்து உதயநிதி காத்திருக்கும் நிலையில் மு.க.ஸ்டாலின் தற்போது வரை க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லை என்கிறார்கள்.

நவம்பர் 20 முதல் உதயநிதி தனது அரசியல் ரீதியிலான சுற்றுப்பயணத்தை தொடங்க ஏற்பாடுகளை செய்துள்ளார். கலைஞரின் பூர்வீகமான தற்போதைய நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து தொடங்கி 10 நாள் பயணமாக 29ஆம் தேதி திருச்சியில் முதற்கட்ட பிரச்சாரத்தை முடிக்க உதயநிதி திட்டமிட்டுள்ளார். பின்னர் 10 நாள் ஓய்வுக்குப் பிறகு, சுற்றுப் பயணம் தொடர்கிறது. பத்து நாள் சுற்றுப்பயணம் 10 நாள் ஓய்வு  இடைவெளி என இந்த சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினை பிராண்ட் செய்யும் விதமாக இந்தச் சுற்றுப் பயணம் அமையவிருக்கிறது. செல்லுமிடங்களில் பொதுமக்களோடு தேநீர் அருந்துவது, அவர்களின் குறைகளைக் கேட்டு அறிவது என உதயநிதியின் செல்வாக்கை கூட்டும் விதமாக இந்தச் சுற்றுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. திமுக தலைமை மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீமுக்கோ இந்த சுற்றுப்பயணத்தில் எந்த தொடர்பும் இல்லை. முழுக்க முழுக்க உதயநிதி டீம் இந்த சுற்றுப்பயணத்தை முன்னெடுக்க உள்ளது.

பிரபல பத்திரிகையாளர் ஒருவர் உதயநிதிக்காக இந்த சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி என்ன பேச வேண்டும், எங்கெங்கு பேச வேண்டும், யாரை சந்திக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றையும் அந்த பத்திரிகையாளரே இறுதி செய்துள்ளதாக கூறுகிறார்கள். திமுகவில் ஏற்கனவே ஸ்டாலினுக்கு அடுத்த உதயநிதி தான் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் வென்றால் மட்டுமே உதயநிதியின் அரசியல் எதிர்காலம் எளிதாக இருக்கும்.

எனவே கட்சிக்காரர்களை தொடர்ந்து தமிழக மக்கள் மனதிலும் உதயநிதியை பதிய வைக்க இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று திரும்பிவிடுவது என்று உதயநிதி கணக்கு போட்டுள்ளார். மேலும் சுற்றுப்பயணத்தின் போது திமுக தரப்பில் இருந்து பல்வேறு பிரேக்கிங் செய்திகளை கொடுக்கவும் ஏற்பாடு நடைபெறுவதாக சொல்கிறார்கள். வழக்கம் போல் மோடி, எடப்பாடிக்கு எதிரான விமர்சனப்பேச்சு மட்டும் இல்லாமல் திமுகவின் உட்கட்சி அரசியல் குறித்தும் வெளிப்படையாக உதயநிதி பேசுவார் என்கிறார்கள்.

உதயநிதி தனது அரசியல் சுற்றுப்பயணத்திற்கு நாள் குறித்துவிட்டார். ஆனால் தற்போது வரை திமுக தலைமை இந்த பயணத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள். அதாவது மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் அவசரம் காட்டவில்லை என்று கூறுகிறார்கள். உதயநிதி என்ன எல்லாம் செய்யப்போகிறார் என்கிற செயல்திட்டத்தை ஒன்றுக்கு மூன்று முறை ஸ்டாலின் படித்துவிட்டதாகவும் ஆனால் அவர் தற்போது வரை சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள். இதற்கு காரணம் உதயநிதியின் பயணத்திட்டம் மிகவும் சென்சிடிவாக இருப்பதாக ஸ்டாலின் நினைப்பதாக கூறுகிறார்கள்.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக உதயநிதியை தேர்தல் பிரச்சரத்திற்கு அனுப்புவது சரியாக இருக்குமா என்று ஸ்டாலின் யோசிப்பதாக சொல்கிறார்கள். மேலும் ஆங்காங்கே பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே அவற்றைஎல்லாம் உதயநிதி சரியாக கையாள்வாரா என்றும் ஸ்டாலின் யோசிப்பதாக கூறுகிறார்கள். ஏதேனும் எக்குத்தப்பாக உதயநிதி பேச அது கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதையும் ஸ்டாலின் கவனத்தில் கொண்டுள்ளதாக சொல்கிறார்கள்.

மேலும் வாரிசு அரசியல் என்கிற விமர்சனத்தை உதயநிதி பிரச்சாரத்தை தொடங்கினால் தற்போதே அதிமுக கையில் எடுக்கும் என்று ஸ்டாலினுக்கு நன்கு தெரியும். எனவே எதிர் முகாம் என்ன மாதிரி இந்த விஷயத்திற்கு ரியாக்ட் செய்யும் என்பதை எல்லாம் பார்த்து தான் உதயநிதியை பிரச்சாரத்திற்கு அனுப்ப ஸ்டாலின் ஒப்புக் கொள்வார் என்கிறார்கள். அதுவரை உதயநிதி திரைப்பட படப்பிடிப்புகளில் தீவிரம் காட்ட வேண்டியதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது போல.