மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் 2வது அலை மிக வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. டெல்லியில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அறிவித்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை 35,000ஐ தாண்டியுள்ளது. 2வது அலையின்  இளம் வயதினரை அதிகம் பாதித்து உயிர்பலியை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக செயல்பட்டு வருபவர் சீதாராம் யெச்சூரி. இவரின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி(34). இவர் முன்னணி செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதனிடையே, ஆஷிஸ் யெச்சூரிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி அருகே  குருக்கிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;-  ஆஷிஷ் யெச்சூரியின் இழப்பை அறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் சீதாராம் யெச்சூரி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.