சென்னையில் நள்ளிரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடை மழை பெய்து வருவதன் காரணமாக. தாழ்வான இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இதன் எதிரொலியாக  செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குமரிக் கடல் முதல் வட தமிழகம் வரை நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாகவும், நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மீனம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுதாங்கள், சைதப்பேட்டை, அண்ணாநகர், திருவல்லிக்கேணி,  மெரினா, ராயபுரம், நுங்கம்பாக்கம் வண்ணாரப்பேட்டை என சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. வேளச்சேரி மாம்பலம் மடிப்பாக்கம் பெரம்பூர் கொளப்பாக்கம், மணலி அம்பத்தூர் புரசைவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது இடியுடன் கூடிய மழை பொழிவு காணப்பட்டது. தாம்பரம், கேளம்பாக்கம், வண்டலூர், ஆவடி, செங்குன்றம், பூந்தமல்லி பெருங்குளத்தூர் ஆகிய புறநகர் பகுதியிலும் மழை இரவு முழுவதும் அடர்த்தியான கன மழை பெய்தது.  

மழை காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர். மேலும் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் 21 அடிகளை எட்டியுள்ளது. இன்னும் 3 அடிகள் நிறையும் பட்சத்தில் அதன் முழு கொள்ளலவான 24 அடிகளை எட்டும். எனினும் 22 அடிகளை எட்டும் பட்சத்தில் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும், மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்குமாறு அரசு சார்பில் உத்தரவிட பட்டுள்ளது.