As Sasikala comes in parole there will be no change in politics
சசிகலா பரோலில் வெளிவந்துள்ளதால் தமிழக அரசியலில் மாற்றம் எதுவும் ஏற்படாது என்று மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடராசனைப் பார்க்க, சசிகலா பரோலில் வந்துள்ளார். சசிகலா பரோலில் வந்துள்ளது குறித்து தமிழக அமைச்சர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, சசிகலா பரோலில் வருவதால் அரசியலில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
தமிழக ஆளுநராக நேற்று பதவியேற்றுக் கொண்ட பன்வாரிலால் புரோகித்தை, மைத்ரேயன் எம்.பி. சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக சசிகலா பரோலில் வந்துள்ளார்.
சசிகலா பரோலில் வந்துள்ளதால் அரசியலில் எந்த மாற்றமும் நிகழாது என்று கூறினார். அரசியல் சூழ்நிலைக்காக மட்டுமே சசிகலாவிற்கு நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது என்றார்.
அடுத்த வெள்ளிக்கிழமைக்குப் பிறகு மீண்டும் ஒரு விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெறலாம் என்றும் மைத்ரேயன் கூறினார்.
