பாடதிட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட எழுத்தாளர் அருந்ததிராயின் புத்தகத்தை மீண்டும் அதே பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக, மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் இன்னபிற கட்சிகளின் சார்பில்  மனோன்மணியம்  சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தர் பிச்சுமணியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆங்கில முதுகலை வகுப்புப் பாடத்திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக இடம்பெற்றிருந்த எழுத்தாளர் அருந்ததிராயின் "Walking with the comrades" என்ற நூல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவு செய்து அறிவித்துள்ளார். மேலும் அதில் உள்ள கருத்துக்கள் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் வகையிலும் அவர்களை மேன்மைப்படுத்தும் வகையிலும் இருப்பதால் அது பாடதிட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த நடவடிக்கையை கண்டித்து கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டியக்கம் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சிகள் சார்பில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் அவர்கள் தலைமையில், நெல்லை திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல் எஸ். லெட்சுமணன் முன்னிலையில் பல்கலைக் கழக துணை வேந்தர் பேராசிரியர் பிச்சுமணி அவர்களை சந்தித்து நீக்கப்பட்ட அருந்ததிராய் புத்தகம் மீண்டும் அதே பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது  திக, திமுக, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், சிபிஎம்எல், மனிதநேய மக்கள்கட்சி, தமுமுக, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, திராவிடத் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக்கட்சி, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மனு அளித்தனர்.