அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா காண்டுவிற்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இதுவரை இந்தியாவில் 50,20,359 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 82,066 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கொரோனா எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவுக்கான அறிகுறி எதுவும் இல்லை. நான் நலமுடன் இருக்கிறேன். தற்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.  என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

இதுவரை அருணாச்சல பிரதேசத்தில் 6,297 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது; 11 பேர் பலியாகி உள்ளனர். 4531 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது 1,755 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.