முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார். 

66 வயதான அருண் ஜெட்லி, பிரதமர் நரேந்திர மோடியின், கடந்த ஆட்சிக்காலத்தில், நிதியமைச்சராக பதவி வகித்தார். கடந்த ஆட்சியின் இறுதியில், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அவர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். இதனால், இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல், தீவிர அரசியலிலிருந்து விலகியிருந்த அருண் ஜெட்லி, வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், அருண் ஜெட்லிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார். இதயம்-நரம்பியல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அருண் ஜெட்லிக்கு, அத்துறைகளின் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, இரவு 8 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து, அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும், குடும்பத்தினரிடமும் கேட்டறிந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மக்களவைத் தலைவர் சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை புரிந்து, அருண்ஜெட்லி உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தனர். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெட்லியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்த வெங்கையாநாயுடு, அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தார்.