பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுப்பதற்காக அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரது பெயர்களை இழுத்து பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு ஜேட்லி மற்றும் சுஷ்மாவின் மகள்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. தமிழ்நாட்டில் முத்திரையை பதிக்கும் முனைப்பில் பாஜக இருக்கும் நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில், இன்று மதுரை, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி. கடந்த செவ்வாய்க்கிழமை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
தாராபுரம் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுகவின் குடும்ப அரசியலை சாடினார். உதயநிதி, ஸ்டாலின் மகன் என்பதாலேயே குறுக்குவழியில் மேலே வருவதாகவும், கட்சியின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, அதனால் திமுக மூத்த தலைவர்களே அதிருப்தியில் இருப்பதாகவும் பேசினார்.

பிரதமர் மோடியின் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் குறுக்குவழியை கடைபிடிக்கிறேன் என்று சொல்வது யாரென்று பார்த்தீர்களா? மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, பல பேரை எவ்வாறு ஓரங்கட்டினார் என்பது எங்களுக்கு தெரியும். மோடி ஓரங்கட்டிய தலைவர்களின் மொத்த பட்டியலும் என்னிடம் உள்ளது என்றார் உதயநிதி.
பாஜக மூத்த தலைவரான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை பெயர்களை குறிப்பிட்டு பேசிய உதயநிதி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோருக்கு அதிக அழுத்தம் கொடுத்ததாலேயே அவர்கள் இறந்தார்கள் என்று ஜேட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜின் மரணத்திற்கு பிரதமர் மோடியை குற்றம்சாட்டினார் உதயநிதி.

பிரதமர் மோடியின் மீதான உதயநிதியின் குற்றச்சாட்டால் அதிருப்தியடைந்த முன்னாள் அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோரின் மகள்கள், உதயநிதிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், உதயநிதி ஸ்டாலின் ஜி, உங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக எங்கள் தாயின் நினைவுகளை பயன்படுத்தாதீர்கள். உங்கள் குற்றச்சாட்டுகள் தவறானவை. பிரதமர் மோடி என் தாயின்(சுஷ்மா ஸ்வராஜ்) மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். நாங்கள் துக்கத்தில் இருந்தபோது பிரதமர் மோடியும் பாஜகவும் எங்களுக்கு ஆதரவாக நின்றனர். உங்கள் பேச்சு எங்களை கஷ்டப்படுத்துகிறது என்று டுவிட்டரில் பன்சூரி ஸ்வராஜ் பதிவிட்டார்.
உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்து அருண் ஜேட்லியின் மகள் சோனாலி ஜேட்லி பக்ஷி பதிவிட்ட டுவிட்டீல், உதயநிதி ஸ்டாலின் ஜி, உங்களுக்கு தேர்தல் அழுத்தம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் என் தந்தை குறித்து நீங்கள் பேசும் பொய்களையும், என் தந்தையை அவமதிக்கும் விதமாக பேசுவதையும் பார்த்துக்கொண்டு நான் அமைதியாக இருக்கமாட்டேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு என் தந்தைக்கும்(அருண் ஜேட்லி) பிரதமர் மோடி ஜிக்கும் இடையே நல்ல பந்தம் இருந்தது. உங்களுக்கும் அந்த மாதிரியான நட்பு கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன் என்று சோனாலி ஜேட்லி பக்ஷி உதயநிதிக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
