Asianet News TamilAsianet News Tamil

உங்க அரைவேக்காட்டுத் தனத்துக்கு மாணவர்களை பலியாக்காதீங்க... எடப்பாடியை கடுமையாக சாடிய ஸ்டாலின்...!

சுய விளம்பர மோகத்திற்காக, உரிய ஆலோசனைகளின்றி, அவசரமாகவும் அரைவேக்காட்டுத்தனமாகவும் செயல்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலியாக்காதீர் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

arrear exam issue... stalin slams edappadi palanisamy
Author
Tamil Nadu, First Published Sep 10, 2020, 11:17 AM IST

சுய விளம்பர மோகத்திற்காக, உரிய ஆலோசனைகளின்றி, அவசரமாகவும் அரைவேக்காட்டுத்தனமாகவும் செயல்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலியாக்காதீர் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிருக்கிற இந்த கொரோனா பேரிடர் காலத்தில், மக்களின் பாதுகாவலராக இருக்க வேண்டிய அ.தி.மு.க. அரசு, தன்னுடைய குழப்பமானதும் குளறுபடியானதுமான செயல்பாடுகளால், கூடுதல் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலக் கனவுகளிலும் விளையாடிக் கொண்டிருக்கிறது.

arrear exam issue... stalin slams edappadi palanisamy

‘அரியர்ஸ்’ தேர்வுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வெழுதாமலேயே தேர்ச்சி பெறுவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி அவசரப்பட்டு அறிவித்ததிலிருந்தே குழப்பங்கள் நீடித்தபடியே இருக்கின்றன. உரிய ஆலோசனைக்குப் பிறகு, இது சாத்தியமெனில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அதுகுறித்தும் முறையான ஆலோசனை எதையும் இந்த அரசு செய்யவில்லை. இந்தநிலையில், முதலமைச்சரின் அறிவிப்பே அவசரமானது, அரைவேக்காட்டுத்தனமானது என்பதையே தற்போது வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

arrear exam issue... stalin slams edappadi palanisamy

தேர்வு இல்லாமல் - மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்பது உயர்படிப்புகளிலும் - தொழில் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளிலும், மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு அனுப்பிய கடிதம் நேற்று வெளியாகியிருந்தது. இந்நிலையில், அந்தக் குழுமத்தின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே, அரியர் தேர்வு ரத்து என்பது தவறான முடிவு எனத் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை நடத்தத் தயார் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமத்திடம் தமிழக அரசு தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

arrear exam issue... stalin slams edappadi palanisamy

மாணவர்களின் அரியர் தேர்வுகள் மீதான முடிவு குறித்து, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் அதிருப்திகள் வெளியாவதும், அதனைப் பூசி மெழுகி மறுத்து, உயர்கல்வித்துறை அமைச்சரும் மற்றவர்களும் ஆளுக்கொரு முரண்பாடான கருத்தைத் தெரிவிப்பதும், இந்த அரசின் தெளிவில்லாத நிலையையே காட்டுகின்றன. இத்தகைய கயிறு இழுக்கும் போட்டிகளில் ஈடுபடுவதால் வதைபடுகிறது மாணவர்களின் எதிர்காலம்! சுய விளம்பர மோகத்திற்காக, உரிய ஆலோசனைகளின்றி, அவசரமாகவும் அரைவேக்காட்டுத்தனமாகவும் செயல்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலியாக்காதீர். மாணவர்களின் நியாயமான - தகுதியான - வேலைவாய்ப்புக்குரிய தேர்ச்சிக்கு வழிவகை காண்பீர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios