நாட்டின் முதல் சிடிஎஸ் பாதுகாப்பு படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் தமிழ்நாட்டில் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
MM Naravane: இந்தியாவின் முதல் பாதுகாப்பு படை தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத் மறைவுக்குப் பிறகு அந்த இடத்திற்கு தற்காலிகமாக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் முதல் சிடிஎஸ் பாதுகாப்பு படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் தமிழ்நாட்டில் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த போது ஹெலிகாப்டரில் 14 பேர் இருந்தனர். அதில் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்ந கோர விபத்து ஒட்டு மொத்த இந்திய தேசத்தையும் உலுக்கியுள்ளது. இந்நிலையில் இந்த விபத்துக்காண காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் மிக மோசமான தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தார். இவர் உயிருடன் மீட்கப்பட்டால் விபத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்த்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு படை தலைமை தளபதி பிபின் ராவத் வகித்து வந்த சிடிஎஸ் பதவி வெற்றிடமாக இருந்து வந்த நிலையில் முப்படை தலைமைத் தளபதியாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. அதில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே விமானப்படை தலைமை தளபதி விவேக்ராம் சவுத்ரி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. இந்நிலையில்தான் முப்படை தளபதிகள் குழுவில் தற்காலிக தலைவராக ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதுள்ள முப்படைத் தளபதிகளில் மூத்தவர் எம்.எம் நரவனே என்ற அடிப்படையில் அவர் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிதாக முப்படை தலைமை தளபதி தேர்வு செய்யப்படும் வரை முப்படை தளபதிகளின் குழுவுக்கு மனோஜ் முகுந்த் நரவனே தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பிபின் ராவத் விட்டுச் சென்ற இடத்தை எவர் ஒருவராலும் இட்டு நிரப்ப முடியாது என்ற சோகம் இருந்துவரும் நிலையில் அந்த இடத்திற்கு மிகத் திறமைமிக்க ஒரு முப்படை தலைமை தளபதியை நியமிப்பது தொடர்பான ஆலோசனை தொடர்ந்து நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
