விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனை அயோக்கியன் என பேசியதற்கு உடனே மன்னிப்பு கேட்ட வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் நடமாட முடியாத சூழல் ஏற்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மிரட்டியுள்ள ஆடியோ வெளியாகி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனை அயோக்கியன் என பேசியதற்கு உடனே மன்னிப்பு கேட்ட வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் நடமாட முடியாத சூழல் ஏற்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மிரட்டியுள்ள ஆடியோ வெளியாகி உள்ளது. மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் அர்ஜுன் சம்பத்துக்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சமீபகாலமாக இந்து இயக்கங்களுக்கும் - திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கிப் பேசுவது வாடிக்கையாகி வருகிறது. திருமாவளவனும் தொடர்ந்து சனாதனம், பாஜகவின் சித்தாந்தங்களுக்கு எதிராக மேடைதோறும் பேசிவருகிறார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் சிலைகள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மனுதர்மம் குறித்தும் அவர் பேசிய பேச்சு கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது, அது முதல் பாஜக விடுதலை சிறுத்தைகளுக்கு இடையேயான கருத்து மோதல் தமிழகத்தில் தீவிரமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் பாஜக மற்றும் இந்து இயக்கத் தலைவர்கள் திமுகவை காட்டிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை மிககடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தில்லை நடராஜரை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ள யூடியூப்பர் மைனர் விஜய் என்பவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிவாச்சாரியர்கள், இந்து இயக்கத்தினர், பாஜகவினர் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், யூ2 புரூட்டஸ் மைனர் விஜய்யை உடனே கைது செய்ய வேண்டும், ஆனால் திருமாவளவன் போன்றவர்கள் அந்த நபருக்கு பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

வெளிநாட்டில் பணத்தை வாங்கிக்கொண்டு தினந்தோறும் இந்து கடவுள்களை இழிவு படுத்தி வரும் திருமாவளவன் ஒரு அயோக்கியன், அவரால் தலித் இளைஞர்கள் ஏராளமானோர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். சமூகத்தில் சாதி மோதல்களை தூண்டி வருகிறார் என சரமாரியாக குற்றம் சாட்டினார். அர்ஜுன் சம்பத்தின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை அயோக்கியன் என பேசிய அர்ஜுன் சம்பத் எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொந்தளித்து வருகின்றனர். அவர்கள் தொலைபேசி வாயிலாக அழைத்து எச்சரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஒருவர் அர்ஜுன் சம்பத்தை தொலைபேசி வாயிலாக எச்சரிக்கும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், எங்கள் தலைவரை பார்த்து அயோக்கியன் என பேசுகிறீர்கள் அதற்கு நீங்கள் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இந்து மதம் இந்து மதம் என்று பேசுகிறீர்கள் நீங்கள் இந்து என்றால் சங்கரமடத்தில் ஜேயேந்திரருக்கு இணையாக அமர முடியுமா? அப்படி இல்லையென்றால் நீங்கள் என்ன இந்து, இனி இந்து சந்து என்றெல்லாம் பேசாதீர்கள், இந்து மதத்தில் சாதியின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு போதிக்கப்பட்டுள்ளது, அதை தூக்கிப் பிடித்து இந்து என பேசி வருகிறீர்கள். எங்கள் தலைவரை அயோக்கியன் என பேசியதற்கு மன்னிப்பு கேளுங்கள், மன்னிப்பு கேட்டு உடனே பகிரங்க அறிக்கை வெளியிடுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்துவோம். நீங்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்படும். என அவர் எச்சரித்துள்ளார்.