மும்மொழிக் கொள்கையின் அவசியம் குறித்து விவாதிக்க தயாரா? அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை கேள்வி!!
மும்மொழிக் கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த நான் தயார். நீங்கள் தயாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் பொன்முடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்மொழிக் கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த நான் தயார். நீங்கள் தயாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் பொன்முடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக் கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகளை ரத்து செய்வதாக அறிவித்து அண்ணா பல்கலைக் கழகம் சார்பில், கடந்த 20 ஆம் தேதி அன்று, அறிவிப்பு வெளியானது. அதனை எதிர்த்து, தமிழக பாஜக சார்பில், 25 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகே, தமிழ் வழிப் பாடப் பிரிவுகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று அறிவிக்கிறார் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தமிழக பாஜக எதிர்ப்பு அறிக்கை வெளியான ஐந்து நாட்கள், அமைச்சருக்கு இந்த அறிவிப்பு குறித்துத் தெரியாதா அல்லது நாங்கள் கேள்வி எழுப்பியிருக்காவிட்டால், இதனை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்று இருந்தாரா அமைச்சர்? அரசுக்குத் தெரியாமலேயே, அண்ணா பல்கழைக்கழகம் அறிவித்துள்ளதாகக் கூறுகிறார் அமைச்சர் பொன்முடி. அண்ணா பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினராக, திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் இருக்கிறார். அப்படி இருக்கையில் பல்கலைக் கழகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அரசுக்குத் தெரியவில்லை என்றால் ஆட்சிக் குழுவில் இடம் பிடிப்பதால் என்ன பயன்?
இதையும் படிங்க: ஐடி ரெய்டு கேள்விகளை தவிர்க்க பத்திரிகையாளர்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்த அமைச்சர், கனிமொழி
அரசுக்குத் தெரிந்தே தமிழ் வழிப் பாடப் பிரிவுகள் ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மறைக்க, ஏதேதோ கூறி மழுப்பப் பார்க்கிறார் அமைச்சர் பொன்முடி. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகள் மூடப்படாது என்று கூறியிருக்கிறார் அமைச்சர் பொன்முடி உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்புவதற்கு மட்டுமே தமிழைப் பயன்படுத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கும் அமைச்சர். கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழ் வழிக் கல்வியை மாணவர்கள் மத்தியில் பரவலாக்க தமிழ் வழிப் பொறியியல் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு எடுத்த முயற்சிகள் என்னென்ன என்பதைச் சொல்லத் தயாரா? மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறாரா அண்ணாமலை என்று கேட்டிருக்கிறார் அமைச்சர். என்னைப் பொறுத்தவரையில், என் மகன் படிக்கும் பள்ளியில் மூன்று மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இருபது வயதில், அவர் ஐந்து மொழிகள் கற்றிருக்க வேண்டும் என்பதே என் ஆசை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும். இதே போல பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
இதையும் படிங்க: முன்னாடியே ரெய்டு நடத்தியிருந்தால் கள்ளச்சாராய மரணங்களை தடுத்திருக்கலாம் - செல்லூர் ராஜூ
உலகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க, நம் குழந்தைகள் பல மொழிகள் கற்றுத் தெரிவது நலம். திமுக முதல் குடும்பத்தினரும், மற்ற திமுகவினரும் நடத்தும் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையா கடைபிடிக்கப்படுகிறது? பணமிருந்தால் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். பணமில்லாத ஏழை எளிய மக்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கக் கூடாது என்று நினைக்கும் நீங்கள் எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம். மூன்று மொழிகள் என்றால் ஹிந்தி கட்டாயம் என்ற திசை திருப்பலை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையின் கீழ், மும்மொழிக் கற்றலில் ஹிந்தி கட்டாயம் இல்லை. ஆனால் தாய்மொழி கற்பது கட்டாயம். இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக தாய்மொழி கற்பது கட்டாயமாக்கப்பட்டிருப்பது புதிய கல்வி கொள்கையில்தான். இதனை உங்களால் மறுக்க முடியுமா? மும்மொழிக் கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த நான் தயார். நீங்கள் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.