கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, ஓட்டு போடுவதுகூட ஒரு பங்களிப்புதான் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார். 

கடந்த 2014ம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.அழகிரி கலைஞர் மரணத்திற்கு பிறகு மீண்டும் அரசியல் களம்புக திட்டமிட்டார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு திமுக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அழகிரியால் திமுகவில் பதவி பெற்றவர்கள், உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் கூட அவரை கண்டுகொள்ளவில்லை. அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று அரசியல் பேசி வந்தார். கடந்த வாரம் பேட்டியளித்த அழகிரி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் விவாத பொருளாக மாறியது. 

இந்நிலையில், மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கட்சி தொடங்க இருக்கும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டேன். வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கலாம். தேர்தலில் பங்களிப்பு என்பது பலவிதமாக உள்ளது. அதைப்பற்றி நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது, ஓட்டு போடுவதுகூட ஒரு பங்களிப்புதான். ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ரஜினியுடன் கூட்டணி வாய்ப்பு குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது” எனத் தெரிவித்தார்.