அதிமுக அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி தினகரன் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணபட்டுவாடா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக அம்மா சார்பில் டி.டி.வி.தினகரனும், அதிமுக புரட்சிதலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.

இதில், சசிகலா தரப்பும், ஒ.பி.எஸ் தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டி போட்டதால் சின்னம் முடக்கபட்டது. இதையடுத்து தினகரனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு மின்கம்பம் சின்னமும் ஒதுக்கபட்டது.

இதைதொடர்ந்து ஆர்.கே.நகரில் இருதரப்பினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வபோது இருதரப்பும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளும் போது வாக்குவாதங்களும் மோதல்களும் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன.

இதனிடையே மின்கம்பத்தை இரட்டை இலையை போல் ஒ.பி.எஸ் தரப்பினர் சித்தரித்து வாக்கு சேகரிப்பதாக தினகரன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதற்கு பதிலளித்த ஒ.பி.எஸ் தோல்வி பயத்தில் தினகரன் புலம்புவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அதிமுக அம்மா வேட்பாளர் டி.டி.வி தினகரன் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணபட்டுவாடா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருவதால் கையும் களவுமாக மாட்டிகொண்ட 'தொப்பி' கேங் என நெட்டிசன்கள் வசை பாடி வருகின்றனர்.