அதிமுக செய்திதொடர்பாளர் அப்சரா ரெட்டி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு தான் வெற்றிபெற  முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.  

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை,  தொகுதி பங்கீடு, வேட்புமனு தாக்கல் என தீவிரங்காட்டி வருகின்றன. வழக்கம் போல இந்த தேர்தலிலும் அதிமுக-திமுக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்ப மனுவை மார்ச் 5ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கவேண்டுமென அக்கட்சி அறிவித்துள்ளது. 

இந்நிலையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இந்நிலையில் ஏராளமான அதிமுகவினர் விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளரும், டீவி தொகுப்பாளருமான அப்சரா ரெட்டி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளார். மனு தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது: 

திமுக என்னும் தீய சக்தியை தோற்கடிக்கவும், ஸ்டாலினை தோற்கடிக்கவும் தான் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். அரசியலில் சாதிக்க பாலினம் ஒரு தடை இல்லை என்றும், மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறியே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்னை கட்சிக்குள் இணைத்தார். 

மேலும், அனைத்து சமுதாயத்திற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றுதான் ஓ.பி.எஸ் - இ.பி எஸ் ஆகிய இருவரும் பேசிவருகின்றனர். திமுக லாப்டாப்பில் அரசியல் செய்து வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தால், நிச்சயம் போட்டியிட்டு  ஸ்டாலினை வீழ்த்துவேன் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் வென்று அதிமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் எனவும் அவர் கூறினார்.