அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் தொடுத்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்து உள்ளது. 

குக்கர் சின்னத்தை வழங்க எதிர்ப்புத் தெரிவித்ததால் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனையடுத்து, அமமுக வேட்பாளர்கள் 59 பேரையும் சுயேட்சைகளாக கருதி அவர்கள் அனைவருக்கும் ஒரே பொதுச்சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையில் அமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்று நண்பகல் 2 - 3 மணிக்குள் தேர்தலில் போட்டியிடும் அனைவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அமமுக உத்தரவிட்டது. அதற்குள் தேர்தல் ஆணையம் அமமுகவுக்கு பொதுச் சின்னத்தை வழங்கும் என எதிர்பார்த்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று மாலைக்குள் முடிவடைய உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பொதுச்சின்னம் ஒதுக்கக்கூடாது எனக்கோரி மேல்முறையீடு செய்தது. 

அதில், டி.டி.வி.தினகரன் வழக்கிற்கான உத்தரவை மற்ற வழக்குகளுக்குகளில் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளக்கூடும். ஆகையால் பொதுச்சின்னம் ஒதுக்கக்கூடாது’ என கோரிக்கை வைத்தது. டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது. தானாக முன் வந்து இந்த வழக்கை மேற்கோள் காட்டக்கூடாது. அந்தந்த வழக்கின் சாராம்சப்படி நீதிபதிகள் விசாரித்து உத்தரவிடுகின்றனர். ஆகையால் இந்த வழக்கை மேற்கோள் காட்டக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டுக் கோரிக்கையை நிராகரித்தது. இதனால் டி.டி.வியின் அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்குவது உறுதியாகி இருக்கிறது.