திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுவை வாபஸ் பெற்று, உயர்நீதிமன்றத்தை நாட தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பட்டியலின மக்களையும் நீதிபதிகளையும் விமர்சித்துப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மே 23ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், ஆர்.எஸ்.பாரதி சரணடையும் தினத்தில் ஜாமீன் மனுவை பரிசீலிக்க முதன்மை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. ஆர்.எஸ்.பாரதி மனுவை விசாரித்த எழும்பூர் கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி ஜூன் 1ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேல் முறையீடு செய்துள்ளனர். மனுவில், வழக்கு தொடர்பாக ஆர்.எஸ்.பாரதியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது. ஆகவே, கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு காணொலி காட்சி மூலம் நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா முராரி, ரவீந்திர பாட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுவை வாபஸ் பெற்றுவிட்டு, உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் எப்படியாவது ஆர்.எஸ்.பாரதி கைது செய்ய திட்டமிட்டிருந்த தமிழக அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.