ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
சந்திரபாபு நாயுடு கடந்த 2014-ம் ஆண்டு முதல்வராகத் தேர்வானபோது விஜயவாடாவுக்கு அருகே அமராவதியில் புதிய தலைநகரை நிர்மானிக்கத் தொடங்கினார். விஜயவாடாவுக்கு அருகே குண்டூரில் உள்ள மங்களகிரி பகுதியில் உண்டவல்லியில் வீட்டை மாற்றினார். இதற்காகத் தொழிலதிபர் ஒருவரின் வீட்டை ஆந்திர அரசு குத்தகைக்கு எடுத்தது. முதல்வர் அலுவலகமாகவும் செயல்பட்ட இந்த வீட்டில் கூட்ட அரங்கமும் பின்னர் கட்டப்பட்டது.
இந்நிலையில் ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்கு ட் தேசம் படுதோல்வி அடைந்து, புதிய முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு இந்த வீட்டை காலி செய்யவில்லை. இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன் இந்த வீடு, கூட்ட அரங்கை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கோரி மாநில அரசுக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தக் கடிதத்துக்கு இதுவரை ஜெகன்மோகன் அரசு எந்தப் பதிலையும் சந்திரபாபுவுக்கு அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மங்களகிரி தொகுதியின் ஆளுங்கட்சி உறுப்பினர் ராமகிருஷ்ணா ரெட்டி, சந்திராபு நாயுடு வசிக்கும் வீட்டை மீட்கப் போவதாக அறிவித்துள்ளது ஆந்திராவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “சந்திரபாபு வசிக்கும் வீடு சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஆற்றுப் படுகையில் வீடு அமைந்துள்ளது. எனவே அது சட்டவிரோதமான கட்டிடம். அந்தக் கட்டிடத்திலிருந்து சந்திரபாபுவை வெளியேற்ற அரசு அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கும். தொகுதி எம்.எல்.ஏ. என்ற அடிப்படையிம் அந்த முயற்சியை மேற்கொள்வேன்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 
ஆட்சியைப் பறிகொடுத்தது முதலே சந்திரபாபு நாயுடு தலைவலிகளைச் சந்தித்துவருகிறார். கடந்த வாரம் விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு அவமானப்படுத்தப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டது. தெலுங்கு தேசத்தின் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீரென பாஜக பக்கம் தாவி சந்திராபுவுக்கு அதிர்ச்சி அளித்தனர். சந்திரபாபு வசிக்கும் வீடு தொடர்பாக அரசு எந்தப் பதிலும் கூறாத நிலையில், தற்போது அத்தொகுதியின் எம்.எல்.ஏ. வீசியிருக்கு குண்டால் சந்திரபாபு நாயுடு கலகலத்து போயுள்ளார்.