ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சையில் நடந்த. பொதுக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான துரைக்கண்ணு பங்கேற்றுப் பேசினார்.

அப்போது ஊழலை கண்டு பிடித்தவர்கள் தி.மு.க.வினர் தான். மக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையில் ஊழல், விவசாயத்திற்காக பூச்சி மருந்து வழங்கியதில் ஊழல், மின்சாரம், நிலக்கரி பேரத்தில் ஊழல் என அனைத்திலும் ஊழல் செய்தவர்கள் தி.மு.க.வினர். லஞ்சத்தில் திளைத்தவர்கள் தி.மு.க.வினர். இதனை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் அம்மாவின் பொற்கால ஆட்சி நடக்கிறது.இதை இபிஎஸ் சிறப்பாக நடத்தி வருகிறார். வேளாண்மைத்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்திலும் வளர்ச்சி. வறட்சியிலும் வளர்ச்சி கண்டு வருகிறது தமிழக அரசு.

இந்த சிறப்பான ஆட்சி இன்றைக்கு கவிழ்ந்து விடும், நாளைக்கு கவிழ்ந்து விடும் என்று தினமும் குடுகுடுப்பைக்காரன் போல் சிலர் பேசி வருகிறார்கள். தமிழகத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ்., தஞ்சை மண்ணின் மைந்தன் வைத்திலிங்கம் இருக்கும் வரை இந்த ஆட்சியை, கட்சியை எவராலும் அசைக்க முடியாது என அவர் ஆவேசமாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய துரைக்கண்ணு தற்போது நடைபெற்று வரும்  இந்த ஆட்சியை லஞ்ச ஆட்சி என யாராவது தவறாக பேசினால் அவர்களின் நாக்கை அறுத்து விடுவேன் என்றார். அமைச்சரின் இந்தப் பேச்சு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது