7 பேர் விடுதலை விவகாரத்தில் எந்த முடிவு எடுத்தாலும், அது சட்டரீதியாக இருக்க வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு என்று அக்கட்சி எம்.பி,. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


திருச்சியில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். " மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வலியுறுத்தியதாகவும், புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகள் சிறப்பாக நடைபெறும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும், 7 பேர் விடுதலை விவகாரத்தில் எந்த முடிவு எடுத்தாலும், அது சட்டரீதியான முடிவாகத்தான் இருக்க வேண்டும்.

 காங்கிரஸ் திமுகவுடனான கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். கூட்டணியிலிருந்து வெளியேறி மூன்றாவது, நான்காவது அணி அமைப்பது என்கிற பிரச்சனையெல்லாம் இல்லை.மேலும், அரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என எந்த சட்டமும் இல்லை.அவர்களின் செயல்பாடுகளை பார்த்து மக்கள் தான் அவர்களை அங்கீகரிக்க வேண்டும். மேலும் அமைச்சர்கள் மக்களை சந்திக்கும்போது, எதிர்க்கட்சியினர் மக்களை சந்தித்தால், அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது". என்று தெரிவித்தார்.