அதிகாரத்தை சுவைத்தவர்கள் எக்காரணம் கொண்டும் அதை இழக்க விரும்ப மாட்டார்கள். எப்பாடு பட்டாவது, அதை மீட்க போராடுவார்கள்.

சசிகலா குடும்ப உறவுகள் அனைத்தும், தற்போது அந்த போராட்டத்தில்தான், முழுமூச்சாக இறங்கி உள்ளன. அதிலும், தினகரன் குடும்பம்தான் மற்றவர்களை விட கடுமையாக போராடி வருகிறது.

2011 ம் ஆண்டு சசிகலா உள்ளிட்ட குடும்ப உறவுகள் அனைவரையும் கட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கியதால், ஜெயா டி.வி நிர்வாக பொறுப்பில் இருந்த தினகரன் மனைவி அனுராதாவும், அங்கிருந்து வெளியேறி விட்டார்.

அதன் பின்னர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடும் போதுதான், ஜெயா டி.வி ஊழியர்களுக்கு, தேர்தல் பிரச்சார கவரேஜ் குறித்து சில ஐடியாக்களை கொடுத்து சென்றார். ஆனால் ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டு விட்டது.

ஆர்.கே.நகரில் தேர்தல் நடந்து, அதில் தினகரன் ஜெயித்திருந்தால், இந்நேரம் கட்சி, ஆட்சி, ஜெயா டி.வி என அனைத்தும் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்திருக்கும்.

தினகரன் முதல்வராகி இருப்பார். டாக்டர் வெங்கடேஷ் அதிமுக இளைஞர் அணி செயலாளராகி இருப்பார். தினகரன் மனைவி அனுராதா  ஜெயா டி.வி நிர்வாகத்தை கைப்பற்றி இருப்பார்.

ஆனால் நிலைமை அப்படியே தலை கீழாக மாறி விட்டது. தினகரன் கட்சியை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்டு, சிறைக்கும் சென்று விட்டார். 

அதனால், ஜெயா டி.வி பக்கமே போகாமல் இருந்த அனுராதா, தற்போது வீட்டில் இருந்தபடியே, ஊழியர்களுக்கு உத்தரவு போட்டு கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, ஆட்சியும், கட்சியும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், "சின்னம்மா பொது செயலாளராக இருக்க வேண்டும். தினகரன் துணை பொது செயலாளராக இருக்கவேண்டும்" என்ற கட்சி நிர்வாகிகள் பேட்டியை ஜெயா டி.வி யில் அடிக்கடி ஒளிபரப்ப வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளாராம் அனுராதா.

ஆனால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அவ்வாறு பேட்டி கொடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அதனால், சாதாரண நபர்களின் பேட்டி மட்டுமே, வேறு வழியின்றி ஜெயா டி.வி யில்  ஒளிபரப்பப்பட்டு வருவதாக தகவல்.

மறுபக்கம், தற்போது அனுராதாவின் பேச்சை கேட்டால், அடுத்து நிர்வாகத்தை கவனிக்க வருபவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரும் என்று ஜெயா டி.வி ஊழியர்கள் அச்சத்தில் இருப்பதாகவும்  கூறப்படுகிறது.