புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறவில்லை என்றால், நாடு முழுவதும் இன்னொரு சுதந்திர போராட்டம் நடக்கும் என மோடி அரசுக்கு வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களது உரிமைக்காக லட்சக்கணக்கான விசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான விசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். விவசாயிகள் நடத்தும் இந்தப் போராட்டம், உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசின் அடக்குமுறையால் விவசாயிகள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகிறார்கள். இந்த போராட்டமே அடுத்த தலைமுறையினருக்கு தான் என்பதை மோடி அரசு உணர வேண்டும். ஏற்கனவே நாட்டில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ள நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் வந்தால் தற்கொலை மேலும் அதிகரிக்கும். இல்லையென்றால் விவசாயிகள் தங்களது நிலங்களை கார்பரேட் நிறுவனங்களுடன் கொடுத்து விட்டு, அந்த நிலங்களில் விவசாயிகள் கூலி வேலை செய்யும் அவலம் ஏற்படும்.

ஆயிரக்கணக்கில் திரண்டாலும் விவசாயிகள் கட்டுப்பாட்டுடன் அறப்போராட்டத்தை நடத்துகின்றனர். இதே அறத்துடன் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், நாடு முழுவதும் இன்னொரு சுதந்திர போராட்டம் நடக்கும் என மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்'' என கூறியுள்ளார்.