தமிழக அமைச்சரவையில் புதிதாக தலித் சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏவுக்கு வாய்ப்பு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்தது. அதிமுகவின் வாக்கு வங்கியாக கருதப்பட்ட தலித் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளை மட்டுமே பெற்றனர். இதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது முதல் இருந்தே தலித் சமூகத்தை திருப்தி படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் அதிமுக மேலிடம் இறங்கியது. அண்மையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் கூட வழக்கத்தை விட தலித் சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அமைச்சர் பென்ஜமினுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமைச்சரவையிலும் தலித் சமுதாயத்தை சேர்ந்த மேலும் ஒருவருக்கு பிரதிநிதித்துவம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் மணிகண்டன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது முதல் ராமநாதபுரம் மாவட்டம் அமைச்சர்கள் யாரும் இல்லாத மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஒரு மாவட்டத்தில் அமைச்சர்கள் யாரும் இல்லாமல் இருப்பது கட்சிப் பணிகளில் தொய்வை ஏற்படுத்தும் என்று அதிமுக தலைமை கருதுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஒருவருக்கு அமைச்சர் பதவியை கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் கடந்த சில மாதங்களாகவோ எடப்பாடி பழனிசாமியின் கருணைப் பார்வைக்காக காத்திருக்கிறார். கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வது, முதலமைச்சர் தொடர்புடைய நிகழ்வுகளில் புறக்கணிப்பு செய்யப்பட்டாலும் கவலைப்படாமல் பங்கேற்பது.

இப்படி மீண்டும் அமைச்சர் பதவியை குறி வைத்து மணிகண்டன் காய் நகர்த்தி வருகிறார். ஆனால் அமைச்சராக இருக்கும் போது மற்றொரு அமைச்சருக்கு எதிராக அதுவும் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமான உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வெளிப்படையாக மணிகண்டன் பேசியிருந்தார். இதனால் ஏற்பட்ட கோபம் எடப்பாடிக்கு இன்னும் குறையவில்லை என்கிறார்கள். எனவே அமைச்சர் பதவியை மீண்டும் மணிகண்டனுக்கு கொடுக்க வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்கள். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் புதியவர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்க எடப்பாடி முடிவு செய்துள்ளார்.

ராமநாதபுரத்தில் அதிமுகவிற்கு இருப்பது இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே. ஒருவர் மணிகண்டன். அவருக்கு வாய்ப்பு இல்லை. எனவே மற்றொருவர் பரமக்குடி தனித் தொகுதி எம்எல்ஏ சதன் பிரபாகர். இவர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு நெருக்கமானவர். இவரது தந்தை அமைச்சர் ஓஎஸ் மணியனுக்கு நெருக்கமானவர். இந்த நெருக்கங்களை பயன்படுத்தி தான் சதன் பிரபாகர் எம்எல்ஏ ஆனார் என்று பேச்சு அடிபடுகிறது. தற்போது மணிகண்டன் நீக்கத்திற்கு  பிறகு அவரது பொறுப்புகளை அமைச்சர் உதயகுமார் தான் கவனித்து வருகிறார். எனவே சதன் பிரபாகருக்கு அமைச்சர் பதவிக்கு உதயகுமாரும் பரிந்துரைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

ஏற்கனவே தமிழக அமைச்சரவையில் பெஞ்சமின், ராஜலெட்சுமி என இரண்டு தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். இந்த நிலையில் மூன்றாவதாக சதன் பிரபாகருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் அந்த சமுதாயத்தினர் மத்தியில் அதிமுகவால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அதிமுக மேலிடம் கருதுகிறது. மேலும் தென் மாவட்டங்கள் மட்டும் இன்றி தலித்துகள் அதிகம வசிக்கும் பகுதிகளில் எல்லாம் வாக்கு வங்கியை பலப்படுத்த முடியும் என்று கணக்கு போடப்படுகிறது.

மேலும் தமிழக அமைச்சரவையில் மூன்று தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் என்று பிரச்சாரம் செய்ய முடியும் என்றும் அதிமுக மேலிடம் கருதுகிறது. அதே சமயம் முதல் முறை எம்எல்ஏ ஆன ஒருவருக்குஅ மைச்சர் பதவியா என்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பதவி நீக்கத்திற்கு ஆளான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆதரவாளர்கள் எதிர்ப்புகுரல் கொடுக்க கூடும் என்கிறார்கள். ஆனால் அதற்கு எல்லாம் எடப்பாடியார் அசரமாட்டார் என்றும் சொல்கிறார்கள்.