சீனியர் நிர்வாகிகளை ஏன் அழைக்கவில்லை? இதுபோன்ற நிகழ்சிகளுக்கு சீனியர் நிர்வாகிகளை அழைத்தால்தான் கட்சியில் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும். அவர்களுடன் கலந்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பு இதுபோன்ற நிகழ்வுகளில்தான் அமையும்.
தனது வீட்டில் நடைபெற்ற தேனீர் விருந்துக்கு தமிழக பாஜக மூத்த நிர்வாகிகளை அழைக்காததால் நயினார் நாகேந்திரனை உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழக பாஜக தரப்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தென் மாவட்டங்களைச் சேர்ந்த 30 தொகுதிகளுக்கான பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நெல்லையில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அதேபோல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரம்மாண்ட வீட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. பூத் கமிட்டி மாநாடு நடந்த இடம் நயினார் நாகேந்திரனின் சொந்த தொகுதிக்கு உட்பட்ட இடம். இதனால் அமித்ஷாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று நயினார் நாகேந்திரன் தேநீர் விருந்து கொடுத்தார். அமித் ஷா சென்றபோது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வீட்டின் முன் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அதைப்பார்த்த அமித் ஷா அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார், அப்போது அண்ணாமலைக்கும் சேர்த்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நயினாரின் வீட்டில் அமித் ஷாவுக்காக வகை வகையான பதார்த்தங்கள் எல்லாம் தயார் செய்யப்பட்டு இருந்தது. ஆனால். தேனீரை மட்டும் அருந்திவிட்டு மற்றவற்றை தவிர்த்து விட்டார் அமித் ஷா. தேனீர் விருந்தின்போது தமிழைசை சவுந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், எல்.முருகன் உள்ளிட்டோர் எங்கே என அமித் ஷா, நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது பதற்றமடைந்த நயினார், இதோ சென்று பார்த்து விட்டு வருகிறேன் என வெளியே பார்த்துவிட்டு வந்துள்ளார்.
சீனியர் நிர்வாகிகளை ஏன் அழைக்கவில்லை? இதுபோன்ற நிகழ்சிகளுக்கு சீனியர் நிர்வாகிகளை அழைத்தால்தான் கட்சியில் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும். அவர்களுடன் கலந்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பு இதுபோன்ற நிகழ்வுகளில்தான் அமையும். ஏன் அவர்களையெல்லாம் அழைக்கவில்லை என நயினார் தரப்பிடம் அமித் ஷா கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, இந்த நிகழ்வுக்கு நயினார் தரப்பிடம் இருந்து தங்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. ஆகையால் கலந்து கொள்ளவில்லை எனக்கூறுகின்றனர். இது ஒருபுறமிருக்க, தேனீர் விருந்தின்போது நயினாரிடம் அமித் ஷா பல்வேறு கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.
‘‘பூத் கமிட்டி கூட்டத்தில் நான் பேசிக் கொண்டிருந்தபோது வெளியேறி பலர் சென்றனர். அப்படி வெளியே சென்றவர்கள் யார்? பூத் கமிட்டி உறுப்பினர்களாக இருந்திருந்தால் அவர்கள் எப்படி வெளியேறி சென்றிருப்பார்கள்? கூட்டத்தில் நிறைய வயதான பெண்மணிகள் இருந்தார்களே... அவர்களும் உண்மையான பூத் கமிட்டி உறுப்பினர்கள்தானா? கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக கூட்டத்தைக் காட்டக்கூடாது.

இது பூத் கமிட்டி உறுப்பினர்கள் மாநாடு என்பதால் உண்மையான பூத் கமிட்டி உறுப்பினர்களை மட்டுமே அழைத்து வந்திருக்க வேண்டும்’’ என பாஜக மாநில நிர்வாகிகளிடம் அமித் ஷா கேள்வி எழுப்யுள்ளார். அதற்கு, ‘‘அனைவரும் பூத் கமிட்டி மெம்பர்கள்தான் சரியான ஆட்களைத்தான் அழைத்து வந்த்ள்ளோம். அனைத்தும் சரியாகவே நடந்து வருகிறது’’ என மாநில நிர்வாகிகள் சமாளித்ததாகவும் கூறப்படுகிறது.
