Asianet News TamilAsianet News Tamil

திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு குட்டி சுவராகியுள்ளது... அண்ணாமலை கடும் விமர்சனம்!!

காவல்துறை கோபாலபுர குடும்பத்துக்கும் திமுக அமைச்சர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை கையாளும் ஏவல் துறையாக மாற்றி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

annamalai slams dmk regarding police and law and order after dmk ruling
Author
First Published Aug 29, 2022, 11:46 PM IST

காவல்துறை கோபாலபுர குடும்பத்துக்கும் திமுக அமைச்சர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை கையாளும் ஏவல் துறையாக மாற்றி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை நாள், விடுமுறை நாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாள் என்று எந்த தினமாக இருப்பினும் மக்களை காக்கும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்கள் குறை தீர்ப்பாளர்கள் நமது காவல்துறை நண்பர்கள். திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல் காவல்துறை தனது தன்மையை இழக்க தொடங்கிவிட்டது. காவல்துறை கோபாலபுர குடும்பத்துக்கும் திமுக அமைச்சர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை கையாளும் ஏவல் துறையாக மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினரை தரம் தாழ்த்தி திமுகவினர் நடத்துவதை கண்கூடாகவே பல இடங்களில் பார்த்தோம். திமுக கவுன்சிலரின் கணவர் என ஒருவர் காவலரிடம் தரக்குறைவாக பேசுவது இணையத்தில் வைரலானது அனைவரும் அறிந்ததே. இவையெல்லாம் காவலர்களை மனதளவில் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை தங்க தொட்டிலில் பிறந்த தமிழக முதல்வர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி மனதளவில் பாதிக்கப்படும் காவலர்கள் மீள்வதற்கான ஒரு சூழலை அரசு உண்டாகியிருக்கிறதா என்று கேட்டால் நிச்சியமாக இல்லை. அதற்கு தமிழகத்தில் அதிகரித்து வரும் காவலர்களின் தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளுமே சாட்சி.

இதையும் படிங்க: ஸ்டாலின் எடுத்த 3 அஸ்திரம்.. ஜெயலலிதா மரணத்தில் சிக்கும் முன்னாள் தலைகள் ? அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்

கடலூரில் கடந்த ஜூன் மாதத்தில் கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்ட போது திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு குட்டி சுவராகி இருப்பதை உணர்த்தியது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் காவலரின் இந்த இறப்புக்கு பின் கண் துடைப்பிற்காக தமிழக டிஜிபி, ஆபரேஷன் கந்துவட்டி நடத்தியதெல்லாம் ஊரறிந்ததே. இதுமட்டுமின்றி கிருஷ்ணகிரியில் ஒரு ஆயுதப்படை காவலரும் கடலூரில் ஒரு ஆயுதப்படை காவலரும் தென்காசியில் ஒரு காவலரும் துப்பாக்கியால் தங்களை தாங்களே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் நெல்லையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருப்பதும் கோவையில் காவல் ஆய்வாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதும் என காவலர்களின் தற்கொலை பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கெல்லாம் ஒரு படி மேலாக குற்றவாளிகளை தண்டித்த கடலூர் மத்திய சிறையின் துணை ஜெயிலர் மணிகண்டன் அவர்களின் குடும்பத்தை எரித்து கொலை செய்ய திட்டமிட்டது கூலிப்படை என்ற செய்தி திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவி வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இப்படி இருக்கையில் காவல்துறையினர் தங்கள் கடமையை திறம்பட செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பிரகாஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் சில முக்கிய அம்சங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதவிக் காலத்தை நிர்ணயிக்க வேண்டும், தேசிய மனித உரிமை ஆணையம் ரிபெய்ரோ ஆணையம் அல்லது சொராப்ஜி ஆணையம் பரிந்துரைத்த மாதிரிகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி மாநில பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும், டிஎஸ்பி மற்றும் படிநிலையில் அதற்குக் கீழ் உள்ள அதிகாரிகளின் அனைத்து இடமாற்றங்கள்.

இதையும் படிங்க: மாணவியை நன்கு படிக்க சொன்னதற்காக ஆசிரியர்களுக்கு ஜெயிலா.?? கள்ளக் குறிச்சி மாணவி வழக்கில் நீதிபதி ஆவேசம்.

பதவி உயர்வுகள் தொடர்பான விஷயங்களைத் தீர்மானிக்கும் வகையில் மாநில அளவில் ஒரு வாரியத்தை அமைக்க வேண்டும், திமுக ஆட்சிக்கு வந்த பின் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.டி.செல்வத்தின் தலைமையில் காவல் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஒரு ஆணையத்தை அமைத்தார்கள். அதற்கு பின் சி.டி.செல்வத்தின் வாகனம் தாக்கப்பட்டது. திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கின் நிலையை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகியது. ஆணையம் அமைத்து மாதங்கள் பல கடந்த பின்பும் இதுவரை எந்த ஒரு அறிக்கையும் அரசுக்கு சமர்பிக்கப்பட்டதாக தெரியவில்லை. உடல் சோர்வுடனும் மன சோர்வுடனும் காவல்துறையில் பணியாற்றி வரும் சகோதர சகோதரிகளை உதாசீனப்படுத்தாமல் அவர்களின் உண்மையான பிரச்சனைகளை புரிந்து கொண்டு இந்த அரசு செயல்பட வேண்டும். தமிழகத்தில் காவல்துறையில் உள்ள சுமார் 12.000 காலியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்பிட வழிவகை செய்ய வேண்டும். வெள்ளையர்களின் காலம் முதல் இன்று வரை காவல்துறையின் மாண்பை சீரழித்த ஆட்சிகள் சீரழிந்து போனது. வரலாறு நமக்கு கற்பிக்கும் பாடம். சாமானிய மக்களின் அரணாகவும் நமது நாட்டின் சட்டதிட்டங்களை தாங்கி பிடிக்கும் தூணாகவும் இருப்பது நமது காவல்துறை நண்பர்கள். அரசியல் குறுக்கீடுகளின்றி காவல்துறையினர் சுதந்திரமாக பணியாற்றும் சூழலை உருவாக்குவது காலத்தின் கட்டாயமும் அரசின் கடமையும் ஆகும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios