கோவையில் பொதுமக்கள் இருக்கும் பகுதியில் குண்டு வெடித்திருந்தால் திமுக ஆட்சி டிஸ்மிஸ்..! அண்ணாமலை எச்சரிக்கை
கோவை சிலிண்டர் வெடிப்பு விவகாரம் தொடர்பான ஆதாரங்களோடு மத்திய உள்துறை அமைச்சருக்கு பாஜக தனது தரப்பில் உள்ள ஆதாரங்களைக் கொண்டு கடிதம் எழுதி இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் சதி திட்டம்
கோவையில் நேற்று முன் தினம் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சென்னை தியாகராஜன் அருகில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், கோவையில் கடந்த 23ஆம் தேதி காரில் சிலிண்டர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில் இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு சிலிண்டர் வெடிப்பு என தெரிவித்துள்ளார். அதன் பின் உள்ள குற்ற செயல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கவில்லை என குற்றம் சாட்டினார். இந்த குண்டுவெடிப்பில் கோலி குண்டு,பால்ராஸ் குண்டு மற்றும் குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாக கூறினார்.
மூடி மறைப்பது ஏன்..?
இந்த தீவிரவாத குண்டுவெடிப்பு சம்பவத்தை மூடி மறைப்பதற்காக காவல்துறையினர் சிலிண்டர் வெடிப்பு என கூறி மறைக்க முயல்வதாகவும் மேலும் எந்த குற்ற எண் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை குறித்த தகவலையும் வெளியிட காவல்துறை மறுப்பதாகவும் தெரிவித்தார். கோவை கார் சிலிண்டர் விபத்தில் 5 பேரை கைது செய்திருக்கிறோம் என்ற விசித்திரமான அறிக்கையை கோவை காவல்துறை கொடுத்துள்ளது. ஏன், எதற்காக, எந்த பிரிவு என அந்த அறிக்கையில் எந்த விவரமும் கொடுக்கப்படவில்லை என தெரிவித்தார். தமிழக காவல்துறை முற்றிலும் தோல்வியடைந்திருப்பதாகவும் மேலும் முதலமைச்சர் உட்பட நான்கு பெயரின் அன்றாட செயல்பாடுகளை மட்டுமே உளவுத்துறை கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
குண்டு வெடிப்பு- உள்துறைக்கு கடிதம்
அண்ணாமலை என்ன செய்கிறார். என்ன சாப்பிடுகிறார். இட்லிக்கு சட்னி தொட்டுக்கொண்டாரா என்றே உளவு வேலை பார்ப்பதாக தெரிவித்தார். கோவையில் நல்ல வேலையாக பொதுமக்கள் கூடியிருந்த பகுதிகளில் குண்டு வெடிக்கவில்லையென தெரிவித்தார். அப்படி குண்டு வெடித்திருந்தார் திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்ககும் என கூறினார். ஏற்கனவே கோவை மற்றும் கொங்கு மாவட்டங்களில் பல்வேறு குற்ற செயல் தீவிரவாத செயல் பின்னணி உடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உளவுத்துறை தோல்வியின் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும் தெரிவித்தார். கோவை சிலிண்டர் வெடிப்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு பாஜக தனது தரப்பில் உள்ள ஆதாரங்களைக் கொண்டு கடிதம் எழுதி இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படியுங்கள்
தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல்..? மு.க.ஸ்டாலின் பேச தயங்குவது ஏன்..? அண்ணாமலை ஆவேசம்