தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல்..? மு.க.ஸ்டாலின் பேச தயங்குவது ஏன்..? அண்ணாமலை ஆவேசம்
தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் நடந்துவிட்டது. உயிர் சேதம் ஏற்படும் வரை காத்திருப்பீர்களா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை சிலிண்டர் வெடி விபத்து
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று முன் தினம் அதிகாலை திடீரென காரில் இருந்து சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் கார் முழுவதும் பற்றி எரிந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடைபெற்ற இடத்தில் ஆணி, பால்ராஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்ட விசாரணையில் இறந்தது ஜமேசா முபின் என தெரியவந்துள்ளது. இவரிடம் என்ஐஏ கடந்த 2019 ஆம் ஆண்டே விசாரணை நடத்தியுள்ளது. இதனையடுத்து அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடிபொருட்களுக்கு தேவையான பொட்டாட்சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற வெடி பொருட்கள் தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
முதலமைச்சர் பேச தயங்குவது ஏன்.?
இந்த வெடி விபத்தானது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜமேசா முபின் உடன் தொடர்பில் இருந்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சிலிண்டர் வெடி விபத்து திட்டமிட்ட சதி என்றும் கூட்டம் அதிகமுள்ள பகுதியில் காரை இயக்கி வெடிக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்தநிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
கோவையில் குண்டு வெடிப்பு நடந்து 36 மணி நேரங்கள் கடந்துவிட்டன. ஆனால் இப்பொழுது வரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து இதைப்பற்றி பேச தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் நடந்துவிட்டது. உயிர் சேதம் ஏற்படும் வரை காத்திருப்பீர்களா? எனவும் அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்