அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிப்பதாகவும், கூட்டணியிலிருந்து யார் விலகினாலும் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிப்பதாகவும், கூட்டணியிலிருந்து யார் விலகினாலும் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 165 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 23,000 விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய முன்னேற்ற கழகத்தின் சார்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியின்போது விவசாயிகளின் நலன் கருதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.12 ஆயிரம் கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் தனது தேர்தல் வாக்குறுதியில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்தை செயல்படுத்துவோம் என தெரிவித்தனர்.

ஆனால் சொன்னபடி அவர்கள் செய்யவில்லை. மேலும் விவசாயிகள் பயிர்க் கடன்கள் சென்று கேட்டால் அதிகாரிகள் கரும்பு போட்டு உள்ளீர்களா, மஞ்சள் போட்டு உள்ளீர்களா, மரவள்ளி போட்டு உள்ளீர்களா என நேரடியாக பார்வையிட்ட பின்னரே கடன்களை வழங்குவோம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்க் கடன்கள் வழங்காவிட்டால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் போது கோட்டையை நோக்கி பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம். விவசாயிகள் போராட்டத்தை பாஜக முன்னின்று நடத்தும். மத்திய அரசுடன் இணக்கமான போக்கை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு எவ்வித பாகுபாடுமின்றி மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது என்றார். பின்னர் நாமக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவும் பாஜகவும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் செல்கிறது.

மாநில அரசு கடந்த ஆறு மாத காலத்தில் என்ன புதிய திட்டத்தை மக்களுக்காக செய்தது. தமிழகத்தை பொறுத்தவரை மோடி அரசின் திட்டத்தை காப்பியடித்து மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. மாநில அரசு சுயமாக எந்த ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்துவது இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு தினசரி நடைபெறும் கொலை சம்பவங்களே முன்னுதாரணம்.தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியதே தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழக்காக உள்ளது. 1994ல் கள்ளச்சாராயம் காய்ச்சி கைதாகி குண்டாஸில் சிறையில் இருந்த அமைச்சர் காந்தி என்னை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது. கோமாரி நோய் தடுப்பூசி மத்திய அரசு தரவில்லை என மாநில அமைச்சர் கூறுவது பொய். அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான கோமாரி நோய் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி ஒரே படகில் பயணிப்பதாகவும், கூட்டணியிலிருந்து யார் விலகினாலும் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.