ஒரு அமைச்சர் சிறையில் உள்ளார்... 5 அமைச்சர்களுக்கு தீர்ப்பு காத்துள்ளது- திமுகவிற்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது அடுத்த மூன்று ஆண்டுகளில், திமுகவினருக்கு வருமானம் வருவதற்காக மட்டுமே நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளை மூடி, கள்ளுக்கடைகளைத் திறப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலற்ற ஆட்சியை பாஜக மட்டுமே கொடுக்கும்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.நேற்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழக அரசியல் நேர்மையாக இருந்த காலத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த, அரசியல் அனுபவம் வாய்ந்த, தலைவர்கள் அனைவரும் இன்று பாஜகவில் இருக்கிறார்கள். ஊழலற்ற ஆட்சி பாஜகவால் மட்டும்தான் தர முடியும் என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள்.
அடுத்த பத்து ஆண்டுகளில், நமது நாடு எப்படி இருக்க வேண்டும், அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலை நோக்குச் சிந்தனையோடு செயல்பட்டு வருவதால், கடந்த 1984 ஆம் ஆண்டு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த பாஜக, இன்று 303 பாராளுமன்ற உறுப்பினர்களோடு, தனிப் பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.
சிறைக்கு செல்ல காத்திருக்கும் அமைச்சர்கள்
இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், தொகுதியை முன்னேற்றுவதை விட, தங்களை முன்னேற்றிக் கொண்டார்கள். தொகுதி அமைச்சராக இருந்த திரு. செந்தில் பாலாஜி, தற்போது பண மோசடி வழக்கில் 280 நாட்களாக சிறையில் இருக்கிறார். இத்தனை நாட்களாக, துறை இல்லாத அமைச்சராக மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்ற அவர், இப்போதுதான் ஜாமீன் கிடைப்பதற்காக பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது தம்பி 280 நாட்களாகத் தலைமறைவாக இருக்கிறார். திமுகவில் உள்ள 35 அமைச்சர்களில் 16 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. ஒரு மந்திரி சிறையில் உள்ளார். ஒரு மந்திரி எந்த நேரமும் சிறைக்கு செல்ல தயாராக உள்ளார். அடுத்த 5 மந்திரிகளுக்கு எந்த நேரமும் தீர்ப்பு வரவுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
திராவிடக் கட்சிகளில் முன்பு போன்ற சிறந்த தலைவர்கள் இல்லை. தங்களை வளப்படுத்திக் கொள்ள விரும்பும் தலைவர்கள்தான் இருக்கிறார்கள். 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது அடுத்த மூன்று ஆண்டுகளில், திமுகவினருக்கு வருமானம் வருவதற்காக மட்டுமே நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளை மூடி, கள்ளுக்கடைகளைத் திறப்போம். பனைமரம் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கச் செய்வோம்.
இதுவரை அரசு வேலை கிடைக்கப்பெறாத குடும்பத்து இளைஞர்களுக்கு, அரசு வேலைகளில் முன்னுரிமை கொடுப்போம். 2024 ஆம் ஆண்டு நமது பிரதமர் மோடி அவர்களின் மூன்றாவது முறை ஆட்சியில், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாட்சியாக அமைவார்கள். 2024 முதல் 2026 வரை பாஜகவின் ஆட்சியைப் பார்த்துவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் முடிவெடுங்கள்.
400 இடங்களில் பாஜக வெற்றி
கடந்த 10 ஆண்டுகளாக நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி நடைபெறுகிறது. பிரதமர் அமைச்சரவையில் உள்ள 75 அமைச்சர்களில் ஒருவர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை. தமிழகத்திலும், நாடு முழுவதும், ஊழல் இல்லாத, குடும்ப ஆட்சி இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று நமது பிரதமர் விரும்புகிறார். வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது பிரதமர் மோடி அவர்கள், மூன்றாவது முறையாக 400 இடங்களுக்கும் அதிகமாகப் பெற்றுப் பொறுப்பேற்க, தமிழகத்தில் இருந்து 39 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்
10.5 சதவீதம் என குறைவாக பாமக தனி இட ஒதுக்கீடு கேட்பது ஏன்.? பாமகவிற்கு ராஜகண்ணப்பன் கேள்வி