திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஊழல் நடக்கும் போதே எங்கள் மாநில தலைவர் உடனடியாக பிடித்து விடுவதால் தமிழக அரசு உடனே பின்வாங்கி முடிவை மாற்றிக் கொள்கிறது என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலையில் எச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளாக யாரும் நிறைவேற்றாத, நிறைவேற்றவே முடியாது என்று கருதுகிற விஷயங்கள் எல்லாம் பா.ஜ.க. அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு மத்திய அரசு தடுப்பூசியைக் கண்டுபிடித்து, நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரால் உக்ரைன் நாட்டிலிருந்து 10 ஆயிரத்து 300 மாணவர்களை ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் மீட்டு வந்து உள்ளோம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். இது ஒரு பொய் தகவல். ஏனென்றால் 4 மத்திய அமைச்சர்களை அண்டை நாடுகளில் அமர்த்தி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை மத்திய அரசுதான் அழைத்து வந்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஊழல் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஊழல் நடக்கும் போதே எங்கள் மாநில தலைவர் உடனடியாக பிடித்து விடுவதால் தமிழக அரசு உடனே பின்வாங்கி முடிவை மாற்றிக் கொள்கிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை நிலையங்களில் நெல் விதைக்காதவனும் நெல் விற்பனை செய்து வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு விவசாயும் வஞ்சிக்கப்பட்டு வருகிறார். தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது என்ற ஏற்கனவே மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சொல்லிவிட்டார். 

இந்து கோயில் விஷயத்தில் மிகவும் மோசமாக திமுக நடந்து கொண்டு வருகிறது. கோயில் நகைகளை உருக்குவது என்பது கோவில் நகைகளை திருடுவதற்கு சமம். திமுகவுக்கு சித்தாந்த ரீதியாக கடுமையான எதிர்ப்பை காட்டி வருகிற கட்சி பா.ஜ.க.தான். மாநில தலைவர் ஊழலை வரும் முன் காப்போம் என்று தடுத்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 7 லாக்அப் மரணங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. காவல் துறை என்ற ஒரு துறை தமிழகத்தில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கருணாநிதி சிலையை வைப்பதை பா.ஜ.க. ஏற்கவில்லை. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.” என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.