பட்டியலின ஊராட்சி தலைவர் கொடியேற்றுவதை தடுத்த திமுக நிர்வாகி.! மு.க.ஸ்டாலின் மௌனம், அவலத்தின் உச்சம்- அண்ணாமலை
பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக முதலமைச்சரின் மௌனம் அவலத்தின் உச்சம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கொடியேற்றவிடாமல் தடுப்பு
குடியரசு தின் விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தநிலயில் தமிழகத்தில் ஊரிரு இடங்களில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களை தேசிய கொடியேற்ற விடாமல் தடுக்கப்பட்டதாக புகார் எழுந்ததது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அதிகார போதையில் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய திறனற்ற திமுக ஆட்சியில் பட்டியல் இன ஊராட்சி மன்றத் தலைவர்களான சகோதர சகோதரிகள், தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுக்கும் அவலம், அடிக்கடி நடந்தேறுகிறது; அவர்களது அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. காஞ்சிபுரம் திருப்புக்குழி ஊராட்சித் தலைவர், சகோதரி திருமதி. சுகுணா தேவேந்திரன் அவர்களை, திமுக கட்சிக்காரர் ஒருவர் தூண்டுதலின் பெயரில், இன்று குடியரசு தினத்துக்கு தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுத்திருக்கின்றனர்.
வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர்
கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரையும் கொடியேற்ற விடாமல் தடுத்து, தமிழக பாஜக தலையிட்டதால், கொடியேற்ற அனுமதித்தனர். இது போன்ற பல்வேறு சம்பவங்கள், தமிழகம் முழுவதும் நடந்தேறுகின்றன. பெயரளவுக்கு சமூகநீதி பேசிக்கொண்டு, நடைமுறையில் அதைக் காற்றில் பறக்கவிடும் திமுகவின் பகல் வேஷம், தொடர்ந்து கலைந்து கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு எதிரான சம்பவத்தில், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க, இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும்? தொடரும் பட்டியல் இன மக்களுக்கு எதிரான குற்றங்களை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக முதலமைச்சரின் மௌனம் அவலத்தின் உச்சம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்