அப்போ ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. இப்போ கோயிலில்- திமுக அரசே முழு பொறுப்பு- சீறும் அண்ணாமலை
போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, திமுக தவறியதன் விளைவு, இன்று கோவிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோயில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
சென்னை ஆளுநர் மாளிகை மீது கடந்த மாதம் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெரு பகுதியில் அமைந்துள்ளது வீரபத்திர சுவாமி கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை அதே பகுதியை சேர்ந்த 38 வயதான முரளி கிருஷ்ணன் என்பவர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மது போதையில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.
பெட்ரோல் குண்டு வீசியது ஏன்.?
பெட்ரோல் குண்டை வீசிவிட்டு குடிபோதையில் உளரிய முரளி கிருஷ்ணன், கடந்த நான்கு ஆண்டுகளாக இக்கடவுளே வழிபட்டு வருவதாகவும். கடவுள் தனக்கு திருப்பி ஏதும் தரவில்லை என கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முரளி கிருஷ்ணாவை 5 பிரிவுகளில் போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு,
இதன் தொடர்ச்சியாக இன்று கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஶ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
அ்ண்ணாமலை கண்டனம்
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, திமுக தவறியதன் விளைவு, இன்று கோவிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. தீவிரவாதத் தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று மடைமாற்ற முயற்சித்த கையாலாகா திமுக அரசே இதற்கு முழு பொறுப்பு என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்கள்