Asianet News TamilAsianet News Tamil

அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறது பாஜக… அறிவித்தார் அண்ணமலை!!

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க விருப்பமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

annamalai announced that bjp is not interested to participate in all party meeting
Author
First Published Nov 12, 2022, 12:18 AM IST

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க விருப்பமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினர் அல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு (EWS) அரசியல் அமைப்பு சட்டத்தில் 103 வது திருத்தத்தின் மூலமாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு வழங்கியது. இதனை எதிர்த்து பல மாநில உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் திமுக உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு ஏற்று கொண்டு அனைத்து தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட பின் இந்த வாரம் 7 ஆம் தேதி தீர்ப்பை வெளியிட்டது. இதர பிற்படுத்தப்பட்டோர்,பட்டியிலினத்தோர், பழங்குடியினர் அல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 103வது திருத்தம் செல்லும் என்று ஐவர் நீதிபதிகள் அமர்வில் மூன்று நீதிபதிகள் தெரிவித்ததால், இடஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: சிறைத்தண்டனையை நிறுத்திய நீதிமன்றம்.. ஆனால், 4 வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் !

அனைத்து மனுக்களும் தள்ளுபடி வழக்கம் போல் திமுக தலைவர், திமுக கட்சி தொண்டர்கள் மற்றும் அவர்களது தோழமை கட்சியில் பெரும்பாலானோர் இந்த தீர்ப்புக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்து கொண்டிருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி EWS இட ஒதுக்கீட்டை இரண்டு வருடங்களுக்கு முன்பே அமல்படுத்திவிட்டது, ஆனால் தமிழகத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். திமுகவிடம் நாவை அடகு வைத்து பிழைப்பை நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். 

இதையும் படிங்க: எடப்பாடி Vs ஓபிஎஸ்! இருவரையும் சந்திக்காத பிரதமர் மோடி - வெளியான அதிர்ச்சி காரணம் !

  • மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 1989ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சி தெள்ளத்தெளிவாக கூறியுள்ளது.
  • தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு உச்ச வரம்பான 50 சதவீதத்தை கடந்த போதும் அதற்கு எதிராக பலர் குரல் எழுப்பினாலும், தமிழகத்தின் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் எவ்வாறு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே பாரதிய ஜனதா கட்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்த வகுப்புகள் இடம் பெறலாம் என்ற அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது என்று சட்டத்தை 127 வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலமாக கொண்டு வந்தது மாநில உரிமைகளுக்கு தோள் கொடுத்து நின்றது பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசு.
  • 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட EWS சட்டத்தின் வரலாறு திமுக தலைவர் மறந்திருக்கலாம். 2010ஆம் ஆண்டு சின்ஹோ கமிஷன் தனது அறிக்கையை திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசிடம் சமர்ப்பித்தது. அதை அன்று காங்கிரஸ் கூட்டணியில் இருந்தவர்களுடனும் சட்ட வல்லுனர்களிடமும் ஆராய்ந்த பின்னர் இடஒதுக்கீடு பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு சட்ட மசோதாவும் தயாரானது. ஆனால் சட்ட மசோதாவை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் அரசு வழக்கம் போல் கிடப்பில் போட்டது.
  • முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்களை தீர்மானிக்க ஆண்டு வருமானம் 6 லட்ச ரூபாயாக இருந்தது. 2017 ஆம் ஆண்டு அந்த வருமான வரம்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இடஒதுக்கீட்டை தீர்மானிக்க ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய் என்று வரம்பு உயர்த்தப்பட்டது.
  • அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு EWS சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. பொருளாதார சூழலை நிர்ணயிக்க கீழ்க்கண்ட நிபந்தனைகளையும் மத்திய அரசு கொண்டு வந்தது.

1. ஆண்டு வருமானம் ரூ 8 லட்சம் குறைவாக இருக்க வேண்டும்.

2. ஐந்து ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் இருக்க வேண்டும். 

3. 1,000 சதுர அடிக்கு கீழ் உள்ள வீட்டில் குடியிருக்க வேண்டும், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் 100 கெஜத்துக்கு மேல் நிலம் இருக்க கூடாது, மற்ற பகுதிகளில் 200 கெஜத்துக்கு மேல் நிலம் இருக்க கூடாது.

தமிழகத்தில் EWS இட ஒதுக்கீட்டின் மூலமாக ரெட்டியார், நாயுடு, பிள்ளை முதலியார், பிராமணர்கள், மலங்கரா கிறிஸ்தவர்கள், தாவூத் மற்றும் மீர் இஸ்லாமியர்கள் போன்ற 79 சமூகத்தினர் பயன்பெறுவார்கள் அனைத்து தரப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான். 

நாளை நடைபெறவிருக்கும் அனைத்து கட்சி கூட்டம் நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு விருப்பமில்லை. திமுகவை போல் போலியாக வேஷமணிந்து எங்களுக்கு நடிக்க தெரியாது. ஆகவே நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சி புறக்கணிக்கிறது என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios