உங்களுக்கு ஒரு நியாயம்...! ஊருக்கு ஒரு நியாயமா..? ஸ்டாலின் அரசு மீது பொங்கி எழுந்த அண்ணாமலை
பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சினிமா ஸ்டண்ட் டைரக்டர் கனல் கண்ணன் கைதில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
பெரியார் சிலை- சர்ச்சை கருத்து
இந்து முன்னணி அமைப்பின் சார்பாக கடந்த 1 ஆம் தேதி சென்னை மதுரவாயலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியிருந்தார். கனல் கண்ணனின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்த நிலையில் கனல் கண்ணன் தலைமறைவானார். இதனையடுத்து முன் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமென பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
பதவிக்கு பயத்தில் மூவண்ணக் கொடியை கையில் எடுத்திருக்கிறீர்கள்… மு.க.ஸ்டாலினை சாடிய அண்ணாமலை!!
கனல் கண்ணன் கைது
மேலும் தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து முன்ஜாமின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில் தலைமைறைவாக இருந்த கனல் கண்ணனை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று புதுச்சேரியில் கனல் கண்ணனை சென்னை போலீசார் கைது செய்தனர். கனல் கண்ணன் கைதிற்கு இந்து முன்னனி அமைப்பு கட்ணனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறியிருந்தது.
இரட்டை வேடம் போடும் திமுக
இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தில்லை நடராஜரை களங்கப்படுத்திய கயவனை சிவனடியார்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகும் கைது செய்யாமல் காப்பாற்றி வருகிறது இந்த திமுக அரசு. மறுபுறம், கனல் கண்ணன் அவர்கள் தெரிவித்த கருத்திற்கு உடனடியாக கைது செய்துள்ள இந்த திமுக அரசின் நடவடிக்கைகளின் மூலமாக கருத்து சுதந்திரத்திலும் இவர்களது இரட்டை நிலைப்பாட்டையும் மக்கள் விரோத போக்கையும் வெளிப்படுத்தி விட்டார்கள். சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துவரும் இந்த திமுக அரசு, கனல் கண்ணன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் கோரிக்கை என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
தமிழகம் முழுவதும் நாளை போராட்டம்.. களத்தில் குதித்த இந்து முன்னணி கட்சி - மீண்டும் பரபரப்பு