சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை ஆளுநர் பன்பாரிலால் புரோகித் சூரப்பாவிடம் வழங்கினார்.

சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ராஜாராம்.  இவரது பணி காலம் கடந்த 2016 மே 26ல் நிறைவடைந்தது.  இதனை தொடர்ந்து அந்த பதவிக்கு 2 ஆண்டுகளாக துணைவேந்தர் யாரும் நியமிக்கப்படாத நிலையில், துணைவேந்தராக எம்.கே. சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று நியமித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் துணைவேந்தராக அவர் 3 ஆண்டுகள் பணியாற்றிடுவார்.   இவர் ஐ.ஐ.டி. இயக்குநராக 6 ஆண்டுகள் பணியாற்றியவர்.  இந்திய அறிவியல் நிறுவனத்தில் 24 ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.

உலோக பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள சூரப்பா, 150 ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார்.  தனது 4 ஆய்வு கட்டுரைகளுக்கு காப்புரிமையும் பெற்றுள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் இசைப்பல்கலைக்கழகத்துக்கு கேரளாவைச் சேர்ந்தவரும்,  சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆந்திராவைச் சேர்ந்தவரும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்குகழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய பாஜக அரசு கல்வியை காவி மயமாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.