அ.தி.மு.க.வில் அடுத்த அதிரடியாக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பலரை நீக்கிவிட்டு புதியதாக நிர்வாகிகளை நியமித்து டிடிவி தினகரன் தனது அதிகாரத்தை மீண்டும் காட்டியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை நிரூபிப்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளா்  டி.டி.வி.தினகரன் ஆகியோரிடையே  கடும் போட்டி நிலவுகிறது.

சில தினங்களுக்கு முன்பு அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளா் தினகரன் மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகளை அறிவித்தார்.

19 எம்எல்ஏக்கள் உட்பட 60 பேருக்கு புதிய பொறுப்புகள் வழங்கி அறிவித்ததையடுத்து அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமைச்சர்கள் ஜெயகுமார் உள்ளிட்டோர் , இது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என்று கருத்து தெரிவித்தனா்.

இதன் தொடா்ச்சியாக டி.டி.வி. தினகரன் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் படி விழுப்புரம், திருச்சி, நெல்லை உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக கோட்டங்களில் அண்ணா தொழிற்சங்க புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

மேலும் திருச்சி பெல் நிறுவன அண்ணா தொழிற்சங்கத்திற்கும் புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டிடிவி தினகரனின் இந்த செயல் அதிமுகவில் யாரிடம் அதிகாரம் உள்ளது என்பது  தொடர்பான போட்டியாகவே கருதப்படுகிறது. இது கட்சிக்குள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றே தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.