அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனா தனி வார்டாக பயன்படுத்த திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் 67 பேரை கொரோனா நோய் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, நேற்று ஒரு நாள் மட்டும் 17 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக சென்னை உள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 67-லிருந்து 74ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும்  நிலையில் அவர்களை அனுமதிக்க போதிய இடவசதி ஏற்படுத்துவதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தங்களால் முடிந்த உதவி செய்யவும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த பயன்படுத்தி கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். மு.க.ஸ்டாலின் அளித்த ஒப்புதல் அளித்த கடித்தை, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷிடம்  திமுக சார்பில் எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வழங்கினார்.