திமுக தலைவர் கலைஞர் இருந்த போது பின்பற்றப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் தற்போது மு.க.ஸ்டாலின் மாற்றி வருவதாக அக்கட்சிக்குள் சலசலப்பு உருவாகியுள்ளது.

திமுக தலைவராக கலைஞர் இருந்த வரை அண்ணா அறிவாலயத்தில் தான் அக்கட்சியின் பொதுக்குழு கூடும். உள்ளே இடம் பத்தவில்லை என்றாலும் கூட வெளியே நாற்காலி போட்டு அங்கு பொதுக்குழு உறுப்பினர்களை அமர வைப்பது தான் கலைஞர் ஸ்டைல். திமுக தொடர்புடைய அனைத்து முக்கிய முடிவுகளும் அண்ணா அறிவாலயத்தில் வைத்து எடுப்பது தான் கலைஞரின் தீர்க்கமான முடிவாக இருக்கும்.

கோபாலபுரத்திற்கு தன்னை சந்திக்க யார் வந்தாலும் அரசியல் ரீதியிலான சந்திப்பு என்றால் அவர்களை அண்ணா அறிவாலயத்திற்கு வருமாறு கூறிவிடுவார் கலைஞர். இதே போல் அறிவாலயத்தில் தலைவருக்கு என்று ஒரு அறை உண்டு. அந்த அறையில் உட்காரும் ஷோஃபா ஒன்று உண்டு. அது தலைவருக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. அதில் தவறியும் கூட யாரும் உட்கார மாட்டார்கள்.

கலைஞருக்கான அந்த ஷோஃபா கருப்பு நிறத்தில் இருக்கும். ஏனென்றால் கலைஞருக்கு பிடித்த நிறம் கருப்பு தான். ஆனால் திடீரென அந்த ஷோஃபாவின் நிறம் தற்போது மாறியுள்ளது. அதிலும் பச்சை நிறத்தில் அந்த ஷோஃபாவை மாற்றியுள்ளார்கள். இதனை பார்த்து ஒரு கனம் திமுக உயர்மட்ட நிர்வாகிகள் கூட அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவர்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

ஆனால் பொதுக்குழுவை அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே நடத்தியவதை தான் பலராலும் ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள். இதற்கிடையே வாஸ்து மற்றும் சென்டிமெண்டாக அறிவாலயத்தில் ஸ்டாலின் தொடர்புடைய பல அம்சங்கள் வரிசையாக மாற்றப்படுகின்றனவாம். இதுவும் கூட அண்ணா அறிவாலயத்தின் நீண்ட நாள் நிர்வாகிகளை கலக்கம் அடைய வைத்துள்ளது.