கருணாநிதியின் மறைவுக்கு பின்னர், அரசியலில் நிகழ்வுகளில் இருந்து மொத்தமாக ஒதுக்கி வைக்கப்பட்டார் மு.க.அழகிரி. தனக்கு பொறுப்பு தருமாறு பல்வேறு அழுத்தங்களை கட்சித்தலைமைக்கு கொடுத்து வந்தார். இறுதியாக ஒரு தொண்டனாக சேர்த்துக் கொள்ளச் சொல்லி மன்றாடினார். குடும்ப உறவுகள் சமரசம் செய்தும் மு.க.ஸ்டாலின் மனமிறங்கவில்லை. 

இதனிடையே, ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவரது நண்பரான அழகிரிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் பேசப்பட்டது. மறுபுறம் கலைஞர் திமுக என்ற தனிக்கட்சியை மு.க. அழகிரி தொடங்கப் போவதாகவும் சலசலக்கப்பட்டது.  ஸ்டாலினும், அழகிரியும் மீண்டும் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்களை ஒட்டி உடன் பிறப்புகள் பரபரப்பை ஏற்படுத்தினர். sunன் son க்கே தடையா? அஞ்சாநெஞ்சரே தலைமையேற்க வா..? கலைஞரின் தொண்டர்களை காப்பாற்று என்று போஸ்டர்கள் அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டு வந்தன. 

கடந்த சில வாரங்களாக தான் வழக்கமாக சந்திக்கும் தன்னுடைய ஆதரவாளர்களைக் கூட மு.க.அழகிரி சந்திக்காமல் தனிமையிலே இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில், மு.க.அழகிரிக்கு உடல்நலம் சரியில்லை என்றும், கால்கள் சற்று வீங்கியிருப்பதாக சென்னை கோபாலபுரத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், அவரது உறவினர்கள் வருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அடுத்து, மு.க.அழகிரியை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் பேச்சு, குடும்ப அக்கறையில் நலம் விசாரிப்பா? அல்லது அரசியல் இருக்கிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது. ஆனால், அவர்களின் உரையாடலைப் பற்றி அறிந்த ஓரிரு திமுக புள்ளிகள் மட்டும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியோ மனம் விட்டுப்பேசினால் உள்ளுக்குள் பற்றியெரியும் பகை நெருப்பு சற்று அடங்கும் என்பது தானே நியதி.